ADDED : ஏப் 25, 2024 11:28 PM
பெங்களூரு: வறட்சியால் காய்கறி விலை உயர்ந்து இருப்பதால், மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பெங்களூரு ரூரல், கோலார், சிக்கபல்லாபூர், மாண்டியா, ராம்நகரில் பயிரிடப்படும் காய்கறிகள், பழங்களை பெங்களூரில் உள்ள மார்க்கெட்டுகளில், விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
பெங்களூரில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும், காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதாலும், இந்த ஆண்டு முன்கூட்டியே வெயில் அடிக்க ஆரம்பித்ததாலும், நீர்நிலைகள் வறண்டு போக ஆரம்பித்தன.
இதனால் நீர்நிலைகளை நம்பி விவசாயம் செய்து வந்த விவசாயிகள், காய்கறிகளை சாகுபடி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மாற்று வழிகள் மூலம் தண்ணீர் பயன்படுத்தி ஒரு சில பகுதிகளில், விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்கின்றனர். இதனால் காய்கறிகள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் போது, விலை உயர்ந்து உள்ளது.
கடந்த ஒரு வாரமாக காய்கறிகள் விலை ஏறி கொண்டே செல்கிறது.
அவரைக்காய் விலை ஒரு கிலோ 170 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உள்ளது. குடை மிளகாய் கிலோ 50 ரூபாய் முதல் 56 ரூபாய் வரை; மஸ்ரூம் 100 ரூபாய் முதல் 107 ரூபாய் வரை; இஞ்சி கிலோ 127 ரூபாய் முதல் 140 ரூபாய்.
பூண்டு கிலோ 180 ரூபாய் முதல் 200 ரூபாய்; பீட்ரூட் ஒரு கிலோ 50 ரூபாய்; பாகற்காய் கிலோ 40 ரூபாய்; கத்தரிக்காய் கிலோ 30 ரூபாய்; தக்காளி கிலோ 35 ரூபாய், பீன்ஸ் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதுபோல சமையலுக்கு தேவைப்படும் பருப்புகள் விலையும், அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ 145 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு, இப்போது 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பாசிபருப்பு ஒரு கிலோ 100 ரூபாயில் இருந்து 145 ரூபாயாக உயர்ந்து உள்ளது. பச்சை பட்டாணி ஒரு கிலோ 100 ரூபாயில் இருந்து 140 ரூபாயாக உயர்ந்துஉள்ளது.
இதனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

