ADDED : செப் 01, 2024 11:32 PM

பெங்களூரு: பெங்களூரில் வாகனங்களை 'டோயிங்' செய்ய, அரசு தடை விதித்து உள்ளது. ஆனாலும் மீண்டும் துவங்குமா என்று, கேள்வி எழுந்து உள்ளது.
பெங்களூரு நகரில் நிலவும் முக்கிய பிரச்னைகளில், போக்குவரத்து நெரிசலும் ஒன்று. நகரின் அனைத்து சாலைகளிலும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் வாகனங்கள் நீண்ட துாரத்திற்கு அணிவகுத்தும் நிற்கும். சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் 'நோ பார்க்கிங்' பகுதியில், வாகனங்களை நிறுத்தி செல்வது தான்.
நோ பார்க்கிங் பகுதி, சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை, போக்குவரத்து போலீசார் டோயிங் செய்து வந்தனர். அதாவது நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இழுவை வேனில் கொண்டு செல்லப்படும்.
இந்நிலையில் வாகனங்களை டோயிங் செய்யும் போது, போக்குவரத்து போலீசார் விதிகளை கடைப்பிடிப்பது இல்லை என்று, வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு கூறினர்.
கடந்த 2022 ம் ஆண்டு உணவு விற்பனை பிரதிநிதியின் பைக்கை, போக்குவரத்து போலீசார் டோயிங் செய்து, இழுவை வேனில் கொண்டு சென்றனர்.
பைக்கை விடுவிக்கும்படி, உணவு விற்பனை பிரதிநிதி இழுவை வேனில் தொங்கியபடி சென்றார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், டோயிங் முறைக்கு அரசு தடை விதித்தது.
டோயிங் நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை இஷ்டத்திற்கு சாலையில் விட்டு செல்ல ஆரம்பித்து உள்ளனர்.
இந்நிலையில் நகரின் இதய பகுதியான மெஜஸ்டிக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும், போக்குவரத்து நெரிசலை கையாளும் வகையில், நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை டோயிங் செய்ய, உப்பார்பேட் போலீசாருக்கு மட்டும், கர்நாடக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இழுவை வேனில் அதன் ஊழியர்கள், போக்குவரத்து ஏ.எஸ்.ஐ., பணியில் இருக்கின்றனர்.
உப்பார்பேட்டில் டோயிங்கிற்கு அனுமதி அளித்தது போல், நகரின் முக்கிய பகுதிகளிலும், தேவைப்பட்டால் நகர் முழுவதும் டோயிங் செய்ய அனுமதி கிடைக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.