ADDED : ஆக 06, 2024 11:44 PM
பாலக்காடு : பாலக்காடு மாவட்டத்தில், மழை வெள்ளத்தில் மூழ்கிய பட்டாம்பி பாலத்தில் நேற்று போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பியில் பாரதப்புழை ஆறு குறுக்கிடுகிறது. குருவாயூர், குன்னம்குளம், கூற்றநாடு, சாலிச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ஆற்றை கடந்து செல்வதற்கு, பாலம் உள்ளது.
கடந்த, ஜூலை 30ம் தேதி பெய்த கனமழையால் பாரதப்புழை ஆற்றில், மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், பாலம் நீரில் மூழ்கி, பாலத்தின் சில தடுப்புச் சுவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இதையடுத்து, பாலத்தின் வாயிலாக போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. மழை பொழிவு குறைந்து, ஆற்றில் நீர்மட்டம் குறைந்து, இயல்பு நிலைக்கு வந்ததையடுத்து, பொதுப்பணித்துறையினர் பாலத்தில் ஆய்வு செய்தனர்.
கனரக வாகனங்கள் தவிர, பஸ் உட்பட உள்ள அனைத்து வாகனங்களும் பாலத்தின் வாயிலாக கடந்து செல்லலாம் என்றும், பாலத்தின் சீரமைப்பு பணிகளுக்கு பின் கனரக வாகனங்களும் செல்லலாம் என அறிவித்தனர்.
இதையடுத்து, நேற்று காலை பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. அதேநேரத்தில் பாலத்தின் சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு, முழுமையான போக்குவரத்துக்கு திறக்க வேண்டும் என, அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.