ADDED : ஜூலை 08, 2024 12:45 AM

டேராடூன்: உத்தரகண்டில் இன்று, கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால், சார்தாம் யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் இமயமலை பகுதியில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு ஹிந்து புனித தலங்கள் அமைந்துள்ளன.
இங்கு சென்று வழிபட கோடைக்காலத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான சார்தாம் யாத்திரை மே 10ல் துவங்கியது. இந்நிலையில், இந்த நான்கு புனித தலங்கள் அமைந்துள்ள கர்வால் பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
அங்கு செல்லும் அலக்நந்தா நதியில் அபாய கட்டத்தை நெருங்கி வெள்ளம் பாய்கிறது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பத்ரிநாத் செல்லும் நெடுஞ்சாலையில் பல இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. சமோலி மாவட்டத்தில் உள்ள சத்வபீபால் பகுதியில், பத்ரிநாத் சென்றுவிட்டு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்த ஹைதராபாதை சேர்ந்த இருவர் மீது, மலையில் இருந்து உருண்டு வந்த பாறை விழுந்தது. அதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில் கர்வால் பிராந்தியத்தில் இன்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் சார்தாம் யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். பக்தர்கள் யாரும் ரிஷிகேஷை தாண்டி பயணிக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அப்படி யாத்திரை புறப்பட்டவர்கள் வானிலை சீரடையும் வரை, தற்போது இருக்கும் இடத்திலேயே காத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.