அடல் சேது பாலம் குறித்த வீடியோ ராஷ்மிகாவுக்கு அஞ்சலி கண்டனம்
அடல் சேது பாலம் குறித்த வீடியோ ராஷ்மிகாவுக்கு அஞ்சலி கண்டனம்
ADDED : மே 18, 2024 02:00 AM

கார்வார்: மும்பை அடல் சேது பாலம் குறித்து வீடியோ வெளியிட்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவை, உத்தர கன்னடா காங்கிரஸ் வேட்பாளர் அஞ்சலி நிம்பால்கர் கண்டித்துள்ளார்.
குடகு விராஜ்பேட்டையை சேர்ந்தவர், நடிகை ராஷ்மிகா மந்தனா, 28. சமீபத்தில் தனது 'எக்ஸ்' பக்கத்தில், மும்பை அடல் சேது பாலத்தில் காரில் செல்லும், ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் ராஷ்மிகா மந்தனா பேசுகையில், 'இந்தியாவின் நீளமான கடல் பாலம். 22 கிலோ மீட்டர் துாரம். ஆறு வழி சாலை. இந்த பாலத்தின் மூலம், இரண்டு மணி நேர பயணம், வெறும் 20 நிமிடமாக குறைந்து உள்ளது.
'ஏழு ஆண்டுகளில் பாலம் கட்டி உள்ளனர். இந்தியாவின் கனவு பெரியது. அடல் சேது வெறும் பாலம் இல்லை. இந்தியாவின் வாக்குறுதி. அனைவரும் வளர்ச்சிக்காக ஓட்டு போடுங்கள்' என்று கூறி இருந்தார்.
இந்த வீடியோவை பா.ஜ., தலைவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த வீடியோவிற்கு, 'முற்றிலும் மக்களை இணைப்பதையும், வாழ்க்கையை மேம்படுத்துவதையும் விட திருப்திகரமாக எதுவும் இல்லை' என்று, பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட வீடியோவிற்கு, உத்தர கன்னடா காங்கிரஸ் வேட்பாளர் அஞ்சலி நிம்பால்கர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'புல்லட் ரயிலை பற்றி, நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா? மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் ஒரு பேரழிவு. பூட் நக்குவதை நிறுத்துங்கள். மெகா ஸ்டாரான உங்களுக்கு, அது உதவாது' என்று கூறி உள்ளார்.

