ADDED : மே 23, 2024 10:14 PM

விஜயநகரா: ஹம்பி விருபாக்ஷா கோவில் முன் பகுதியில், விஜயநகர அரசர் காலத்தில் தோண்டப்பட்ட புராதன கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.
விஜயநகரா ஹொஸ்பேட்டின், ஹம்பி விருபாக்ஷா கோவில் முன் பகுதியில், ரத வீதி உள்ளது. இதன் இரண்டு ஓரங்களிலும், வரிசையாக மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களை சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன. சில நாட்களுக்கு முன், மண்ணை அள்ளும் போது, ஈரமான மண் தென்பட்டது. வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், மண் எப்படி ஈரமாக உள்ளது என, ஆச்சர்யம் ஏற்பட்டது.
அதன்பின் மண்ணை மேலும் தோண்டிய போது, கிணறு இருப்பது தெரிந்தது. சுற்றுப்புறங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், இந்த கிணற்றில் 3 அடி தண்ணீர் இருந்தது. கிணற்றை சுற்றிலும் கருங்கற்கள் பொருத்தப்பட்டிருந்தன. கல்லின் சந்துகளில் இருந்து, தண்ணீர் ஊற்றெடுக்கும் வகையில், வசதி செய்திருந்தனர்.
இந்த கிணற்றின் சிறிது தொலைவில், துங்கபத்ரா ஆறு பாய்கிறது. இது கிணற்றை விட, கீழ் மட்டத்தில் உள்ளது. சுற்றிலும் மலைப்பகுதி இருந்தாலும், கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருந்தது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கிணறு, விஜயநகர அரசர் காலத்தில் அமைக்கப்பட்ட புராதன கிணறாகும். விருபாக்ஷா கோவில் சுற்றுப்பகுதிகளில், இதுபோன்ற எட்டு கிணறுகள் இருப்பதாக தெரிகிறது. இவற்றை கண்டுபிடிக்க, மத்திய தொல்பொருள் துறை திட்டமிட்டுள்ளது.