கால்பந்து மினி உலக கோப்பை போட்டி இந்திய அணியில் விஜயநகரா மாணவர்
கால்பந்து மினி உலக கோப்பை போட்டி இந்திய அணியில் விஜயநகரா மாணவர்
ADDED : ஆக 03, 2024 11:22 PM

கர்நாடகாவில் திறமையான பல விளையாட்டு வீரர்கள் உள்ளனர். ஆண்கள், பெண்கள் கிரிக்கெட், பார்வையற்றோருக்கான கிரிக்கெட், ஹாக்கி உட்பட எந்த விளையாட்டுப் போட்டியாக இருந்தாலும் சரி. இந்திய அணியில் கர்நாடகாவைச் சேர்ந்த யாராவது, ஒருவர் கண்டிப்பாக இருப்பார்.
இத்தாலி குரோஷியாவில், வரும் 6ம் தேதி முதல் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான, கால்பந்து மினி உலகக் கோப்பை துவங்குகிறது. இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில், விஜயநகராவின் ஹரப்பனஹள்ளியைச் சேர்ந்த நமித் ஜெயின், 22 இடம் பிடித்துள்ளார். நமித் ஜெயின் பெற்றோர் பிரசன்னகுமார் - ஸ்வரூபா ஆவர்.
பெங்களூரு டான் போஸ்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில், இறுதி ஆண்டு படிக்கிறார். சிறு வயதில் இருந்தே கால்பந்து விளையாடுவதில், நமித் ஜெயினுக்கு ஆர்வம் இருந்தது. இதனால் தன்வீர் என்ற பயிற்சியாளரிடம், பெற்றோர் சேர்த்துவிட்டனர்.
புளுஸ்டார் என்ற கால்பந்து கிளப்பில் உறுப்பினராக உள்ளார். கடந்த ஜூலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த, கால்பந்து போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால், இந்திய அணியில் இணையும் வாய்ப்பு கிடைத்தது.
“படிப்புடன் சேர்த்து கால்பந்து விளையாடவும் பெற்றோர் எனக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளேன். இதற்காக எனது பெற்றோர், பயிற்சியாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என, நமித் ஜெயின் கூறி உள்ளார்
- நமது நிருபர் -.