ADDED : ஆக 08, 2024 11:53 PM
ஷிவமொகா: முதல்வருக்கு எதிராக பாதயாத்திரை நடத்தும், பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை கண்டித்து, அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற, இளைஞர் காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.
மைசூரு மூடாவில் நடந்த முறைகேட்டில், முதல்வர் சித்தராமையா பதவி விலக கோரி, பெங்களூரில் இருந்து மைசூரு வரை, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சியினர் பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த பாதயாத்திரை பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில் நடக்கிறது. இந்நிலையில், ஷிவமொகா டவுனில் உள்ள விஜயேந்திரா வீட்டை, நேற்று காலை இளைஞர் காங்கிரசார் முற்றுகையிட முயன்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து, வேன்களில் ஏற்றினர். 'முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா தான் பெரிய ஊழல்வாதிகள். அவர்கள் எங்கள் முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்' என்று, கோஷம் எழுப்பினர்.
கைது செய்யப்பட்டவர்கள் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.