முதல்வர் ராஜினாமா செய்வது உறுதி விஜயேந்திரா மீண்டும் திட்டவட்டம்
முதல்வர் ராஜினாமா செய்வது உறுதி விஜயேந்திரா மீண்டும் திட்டவட்டம்
ADDED : செப் 05, 2024 05:30 AM

பெங்களூரு: ''மூடா வழக்கில் முந்தைய கமிஷனர் தினேஷ்குமார், சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், வரும் நாட்களில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்வது உறுதி, என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மூடா கமிஷனரை, என்ன காரணத்தால் சஸ்பெண்ட் செய்தனர் என்பது, அனைவருக்கும் தெரியும்.
ஒரு கமிஷனரே சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், ஊழல் நடந்துள்ளதாக அரசே ஒப்புக்கொண்டதாக அர்த்தமாகிறது. மூடா முறைகேட்டில் தனது பங்களிப்பு இல்லை என, முதல்வர் சித்தராமையா கூறி வருகிறார்.
பொறுத்திருங்கள்
தினேஷ்குமார் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்பது, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வரும் நாட்களில் முதல்வர் சித்தராமையா, ராஜினாமா செய்வது உறுதி. காத்திருந்து பாருங்கள்.
மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி மீது, கவர்னரிடம் காங்கிரஸ் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். அமைச்சர் பிரியங்க் கார்கேவிடம், ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் தலைவர்கள் புகார் அளிக்க சென்ற போது, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட மற்ற அமைச்சர்கள் ஏன் இல்லை.
பா.ஜ., மீது சேற்றை வாரி இறைக்கும் வேலையை, காங்கிரசார் செய்கின்றனர். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். பா.ஜ., வீடு ஒன்று, வாசல் மூன்று என, காங்கிரசார் கிண்டல் செய்கின்றனர். மூடா வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின், காங்கிரசிற்கு எத்தனை வாசல் இருக்கும் என்பதை பாருங்கள்.
இடைத்தேர்தல்
சென்னப்பட்டணா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், சீட் பெறுவது தொடர்பாக, எங்கள் கட்சி தலைவர்கள், தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து உள்ளனர்.
யோகேஸ்வர் வேட்பாளராக வேண்டும் என்பது, பலரின் விருப்பமாகும். இறுதியாக கட்சி என்ன முடிவு எடுக்கும் என, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கே.பி.எஸ்.சி., தேர்வை தள்ளி வைக்கும்படி, நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் அரசு எங்கள் பேச்சை பொருட்படுத்தவில்லை. யாரோ ஒருவர் செய்த தவறால், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கிறது. இதற்கு காரணமானவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
கொரோனா தொடர்பாக, எங்கள் அரசில் எந்த தவறும் நடக்கவில்லை. விசாரணை கமிஷன் அறிக்கையில் என்ன உள்ளது என்பது, யாருக்கும் தெரியாது. வெறும் ஊகங்களின் அடிப்படையில், எதுவும் பேச முடியாது.
யு.பி.எஸ்.சி., மற்றும் எஸ்.ஐ., தேர்வு ஒரே நாளில் நடப்பது குறித்து, நாங்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
அரசு ஒரு பக்கம், தேர்வை தள்ளி வைக்கிறது. மற்றொரு பக்கம் ஏற்கனவே நடந்த தேர்வில் குளறுபடி செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.