ADDED : ஜூன் 29, 2024 12:10 AM

புதுடில்லி: நம் நாட்டின் அடுத்த வெளியுறவுத்துறை செயலராக, தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகரான விக்ரம் மிஸ்ரியை, 59, மத்திய அரசு நியமித்து உள்ளது.
வெளியுறவுத்துறை செயலராக உள்ள வினய் குவாத்ராவின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், அப்பதவிக்கு தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகராக உள்ள விக்ரம் மிஸ்ரியை நியமிக்க, மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, அவர் அடுத்த மாதம் 15ம் தேதி வெளியுறவுத்துறை செயலராக பொறுப்பேற்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
விக்ரம் மிஸ்ரி, நம் அண்டை நாடான சீனாவுக்கான துாதராக கடந்த 2019 - 21ல் பதவி வகித்தார்.
அப்போது, சீன எல்லையை ஒட்டியுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவியது.
இதை போக்கும் வகையில், இரு தரப்புக்கும் இடையே சுமுக பேச்சு நடத்துவதில் விக்ரம் மிஸ்ரியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
இது தவிர, முன்னாள் பிரதமர்கள் குஜ்ரால், மன்மோகன் சிங் மற்றும் தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி ஆகிய மூவருக்கும் தனிச்செயலராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.
