ஒலிம்பிக் தகுதி நீக்கம்; தீர்ப்பாய முடிவை எதிர்க்க வினேஷ் போகத்துக்கு விருப்பமில்லை: ஹரிஷ் சால்வே
ஒலிம்பிக் தகுதி நீக்கம்; தீர்ப்பாய முடிவை எதிர்க்க வினேஷ் போகத்துக்கு விருப்பமில்லை: ஹரிஷ் சால்வே
ADDED : செப் 14, 2024 11:49 AM

புதுடில்லி: ஒலிம்பிக் தகுதி நீக்க விவகாரத்தில் சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து போராட வலியுறுத்தியும், வினேஷ் போகத் மறுத்துவிட்டார் என வக்கீல் ஹரிஷ் சால்வே தெரிவித்தார்.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 29. பாரிஸ் ஒலிம்பிக்கில் பிரீஸ்டைல் , 50 கிலோ பிரிவின் பைனலுக்கு முன்னேறினார். பைனலுக்கு முன் நடந்த சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையை விட 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சர்வதேச ஒலிம்பிக், சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு( UwW) முடிவை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் (சிஏஎஸ்) அப்பீல் செய்த வினேஷ் போகத், தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஏமாற்றம்
இதற்கு பிரான்சை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தினர் உதவி செய்தனர். இந்தியாவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே மற்றும் விதுஷ்பாத் சின்ஹானியா ஆஜராகி வாதாடினர். ஆனாலும் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வரவில்லை. இதனால் அவர் பதக்கம் இல்லாமல் பாரிசில் இருந்து வெறுங்கையுடன் திரும்ப வேண்டியிருந்தது.
சில தினங்களுக்கு முன், இந்திய தடகள சங்க தலைவர் பி.டி.உஷா என்னை ஆதரிப்பது போல் நடிக்கிறார் என குற்றம் சாட்டியிருந்தார். வக்கீல்கள் மெத்தனமாக நடந்து கொண்டதால், இறுதியில் பதக்கத்தை இழக்க நேரிட்டது என்றும் அவர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
விருப்பமில்லை
இந்நிலையில், வக்கீல் ஹரிஷ் சால்வே கூறியதாவது: 'தகுதி நீக்க விவகாரத்தில் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வினேஷ்க்கு பல்வேறு உதவிகள் செய்தோம். நாங்கள் கடுமையாக போராடினோம். உண்மையில், தீர்ப்பாய முடிவுக்கு எதிராக சுவிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், எதிர்த்துப் போராடலாம் என்று அந்தப் பெண்ணுக்கு நான் முன்மொழிந்தேன். அவர் மறுத்துவிட்டார். தொடர்ந்து எதிர்த்து போராட தொடர விரும்பவில்லை' என்றார்.
விளையாட்டுப் போட்டிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் அரசியலில் குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.