ADDED : ஆக 04, 2024 11:05 PM

பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவின் உத்தரவுக்கு பணியாமல் ஓய்வு பெறும் அதிகாரியை பணியில் நீட்டித்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் உத்தரவிட்டது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
ஓய்வு பெறும் கட்டத்தில் உள்ள அதிகாரிகளை, மீண்டும் பணியில் நீட்டிப்பதால் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. அரசுக்கும் பொருளாதார சுமை ஏற்படுகிறது.
இதை மனதில் கொண்டே, ஓய்வு வயதை தொட்டுக் கொண்டிருக்கும் அதிகாரிகளை, பணியில் நீட்டிக்க கூடாது என, சமீபத்தில் நடந்த கூட்டத்தில், முதல்வர் சித்தராமையாவும், தலைமை செயலரும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த உத்தரவை வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான் பொருட்படுத்தவில்லை. ஆகஸ்ட் 31ல் ஓய்வு பெறும் அதிகாரியை பணியில் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
குடிசை மாற்று வாரிய தலைமை பொறியாளர் பால்ராஜ், ஆகஸ்ட் 31ல் ஓய்வு பெறுகிறார். இவரை, செப்டம்பர் 1 முதல் இரண்டு ஆண்டுகள் இதே பதவியில் நீட்டிக்கும்படி, வீட்டு வசதித்துறை தலைமை செயலருக்கு, அமைச்சர் ஜமீர் அகமதுகான் உத்தரவிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.