விதிமீறல் பள்ளிகள் பட்டியல் கே.ஏ.எம்.எஸ்., நெருக்கடி
விதிமீறல் பள்ளிகள் பட்டியல் கே.ஏ.எம்.எஸ்., நெருக்கடி
ADDED : மே 26, 2024 06:34 AM
பெங்களூரு: கர்நாடகாவில் அங்கீகாரம் இல்லாமல், விதிமீறலாக செயல்படும் பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்' என, கல்வித்துறையிடம் கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கே.ஏ.எம்.எஸ்., எனும் கர்நாடக தொடக்க, உயர்நிலை பள்ளிகள் அசோசியேடட் மேனேஜ்மென்ட், கல்வித்துறைக்கு எழுதிய கடிதம்:
கர்நாடகாவில் முறைப்படி அங்கீகாரம் பெற்று, அதிகாரப்பூர்வமான பள்ளிகளின் பட்டியலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆனால் துறையின் அனுமதி பெறாத பட்டியலை வெளியிடவில்லை.
கல்வித்துறை வெளியிட்ட பட்டியலில், தங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பள்ளிகளின் பெயரை கண்டுபிடிக்க, பெற்றோர் கஷ்டப்படுகின்றனர். இணைய தளத்தில் அப்லோட் செய்யப்பட்ட பள்ளிகளின் படங்கள் தெளிவாக இல்லை. மங்கலாக உள்ளன.
அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டால், பெற்றோர் உஷாராக உதவியாக இருக்கும். கே.ஏ.எம்.எஸ்., விதிமீறலான பல பள்ளிகளை அடையாளம் கண்டுள்ளது. கல்வியாண்டு துவங்கும் முன்பே, இத்தகைய பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் கல்வித்துறை அதிகாரப்பூர்வ பள்ளிகளின் பட்டியலை மட்டும் வெளியிட்டது.
விதிமீறலான பள்ளிகளை அடையாளம் கண்டு, மத்திய அலுவலகத்துக்கு கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. விதிமீறலான பள்ளிகள், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளை பெற்றோரே, அடையாளம் காண வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
விதிமீறலான பள்ளிகளை அதிகாரிகள் கண்டுபிடிக்காதது ஏன்? வரும் வாரம் இத்தகைய பள்ளிகளின் பட்டியலை வெளியிடாவிட்டால், போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.