மணிப்பூரில் மீண்டும் வன்முறை அமைச்சர் வீட்டின் மீது குண்டு வீச்சு
மணிப்பூரில் மீண்டும் வன்முறை அமைச்சர் வீட்டின் மீது குண்டு வீச்சு
ADDED : செப் 17, 2024 01:00 AM
இம்பால், மணிப்பூரில் அமைச்சர் காஷிம் வஷும் வீட்டை குறிவைத்து, கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, 2023 மே மாதம் நடந்த கலவரத்துக்கு பின், படிப்படியாக இயல்புநிலை திரும்பி வந்த நிலையில், தற்போது மீண்டும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
தாக்குதல்
கடந்த முறை போலல்லாமல் இந்த முறை, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை ஆயுதமேந்திய குழுக்கள் பயன்படுத்தி வருவது, பாதுகாப்புப் படையினருக்கு சவாலாக உள்ளது.
இந்நிலையில், மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள ஆளும் பா.ஜ., அரசில் அங்கம் வகிக்கும் நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த மாநில அமைச்சர் காஷிம் வஷுமின் வீட்டை குறிவைத்து, கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவத்தின் போது, அமைச்சர் காஷிம் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லை. இந்த தாக்குதலில், அவரது வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் சில பகுதிகள் சேதமடைந்தன.
கண்டனம்
இது குறித்து போலீசார் கூறுகையில், 'கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறோம். இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்' என்றனர்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த டாங்குல் நாகா பழங்குடியினரின் உச்ச அமைப்பான டாங்குல் நாகா லாங், குற்றவாளிகளை கைது செய்யும்படி போலீசாருக்கு வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையே, மணிப்பூரில் நாசவேலைகளில் ஈடுபட்டதாகக் கூறி, அம்மாநிலத்தின் சுராசந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயதான நபரை, அசாமின் குவஹாத்தியில் அம்மாநில போலீசார் நேற்று கைது செய்தனர்.