ADDED : ஆக 16, 2024 06:45 AM
பெங்களூரு: பெங்களூரில் மழை, குளிர், வெயில் என வானிலை மாற்றத்தால் வைரல் காய்ச்சல் அதிகரிக்கிறது. மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
பெங்களூரில் சமீப நாட்களாக மழை பெய்கிறது. திடீரென பெய்யும் கனமழை, மற்றொரு நாள் மேகமூட்டம், இன்னொரு நாள் வெயில் என, சூழ்நிலை மாறுகிறது. இதன் விளைவாக வைரல் காய்ச்சல் பரவுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர், வைரல் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர்.
மருத்துவமனைகள், கிளினிக்குகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்கள், சிறு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து, மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரில் மழை, வெயில், குளிர் என மாறி, மாறி வருவதால் மக்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கிறது. வைரல் காய்ச்சல் பரவுகிறது. வீட்டில் ஒருவரிடம் இருந்து, மற்றொருவருக்கு பரவுவதால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தைகள், வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்களை நோய் எளிதில் தாக்கும். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடுமையான காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, உடல் வலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்று போக்கு, வயிற்று வலி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற வேண்டும்.
வைரல் காய்ச்சல் இருந்தால், பலரும் டாக்டரிடம் செல்லாமல் தாங்களாகவே மருந்து கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிடுகின்றனர். இது தவறானது. வேறு விதமான நோய்க்கு காரணமாகிவிடும். காய்ச்சல் இருந்தால் டாக்டரிடம் சென்று, பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெறுவதே நல்லது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.