தேசிய அரசியலுக்கு செல்லும் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி
தேசிய அரசியலுக்கு செல்லும் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி
ADDED : ஜூன் 04, 2024 11:11 PM

பெங்களூரு: பா.ஜ.,வின் அனந்த குமார் ஹெக்டே ஒத்துழையாமைக்கு இடையிலும், உத்தரகன்னடா தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி வெற்றி பெற்றார்.
முதன் முறையாக தேசிய அரசியலுக்கு செல்கிறார்.
உத்தரகன்னடா லோக்பா தொகுதி, காங்கிரசின் பாதுகாப்பு கோட்டையாக இருந்தது. 1996 வரை ஒரு முறை மட்டுமே, மூத்த இலக்கியவாதி தினகர் தேசாய், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 1999ல் காங்கிரசின் மார்கரெட் ஆல்வா வெற்றி பெற்றார். அதன்பின் ஒரு முறை கூட, காங்கிரசால் வெற்றி பெற முடியவில்லை. பா.ஜ., வேட்பாளர் அனந்தகுமார் ஹெக்டே தொடர்ந்து வெற்றி பெற்றார். ஆறு முறை வெற்றி பெற்ற இவர், இம்முறை நடந்த தேர்தலிலும், சீட் எதிர்பார்த்தார்.
ஆனால் முன்னாள் சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரியை, பா.ஜ., களமிறக்கியது.
காங்கிரஸ் வேட்பாளராக அஞ்சலி நிம்பால்கர் போட்டியிட்டார். தனக்கு சீட் கிடைக்காததால், அனந்தகுமார் ஹெக்டே அதிருப்தியில் இருந்தார். வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் வரவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி சிர்சிக்கு வந்தபோதும், அனந்தகுமார் ஹெக்டே வரவில்லை. இவரது ஆதரவு கிடைக்கா விட்டால், வேட்பாளர் வெற்றி பெறுவது கஷ்டம் என, கருதப்பட்டது. ஏனென்றால் தொகுதியில் அவருக்கு பெருமளவில் ஆதரவாளர்கள் உள்ளனர்.
பா.ஜ., மற்றும் ம.ஜ.த., கூட்டணி தலைவர்கள் ஒற்றுமையுடன் பிரசாரம் செய்தனர். அனந்தகுமார் ஹெக்டே 'உள்குத்து' வேலை செய்வாரோ என்ற பீதி கட்சியை வாட்டி வதைத்தது.
ஆனால் இவரது ஆதரவு இல்லாமலேயே, விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தனி நபரை விட, கட்சியே முக்கியம் என்பதை வாக்காளர்கள் நிரூபித்துள்ளனர்.
இதுவரை மாநில அரசியலில் இருந்த அவர், முதன் முறையாக தேசிய அரசியலுக்கு செல்கிறார்.