பிரதமருக்கு ஓட்டு போடுங்கள்! கர்நாடக முதல்வர் சித்துவின் நிபந்தனை
பிரதமருக்கு ஓட்டு போடுங்கள்! கர்நாடக முதல்வர் சித்துவின் நிபந்தனை
ADDED : மே 03, 2024 10:57 PM

உத்தர கன்னடா: ''பத்து ஆண்டுகளில் தான் சொன்னதை செய்திருந்தால் பிரதமர் மோடிக்கு ஓட்டு போடுங்கள். இல்லையெனில் புறக்கணியுங்கள்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
உத்தர கன்னடா மாவட்டம், முண்டகோடாவில் நேற்று காங்கிரஸ் பிரசார கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது: பா.ஜ.,வினர் மதம், வெறுப்பு என மக்கள் உணர்வுடன் அரசியல் செய்கின்றனர். மோடி பிரதமரானால் 100 நாட்களில் கருப்புப் பணத்தை கொண்டு வந்து, நாட்டின் அனைத்து மக்களின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்வதாக தெரிவித்தார். இதுவரை 1பைசா கூட டிபாசிட் செய்யவில்லை.
பக்கோடா
பத்து ஆண்டுகளில், 20 கோடி வேண்டாம், 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவில்லை. வேலை கேட்டவர்களுக்கு 'பக்கோடா' விற்பனை செய்யுங்கள் என கூறுகிறார். பத்து ஆண்டுகளில் பிரதமர் மோடி, அவர் சொன்னதை செய்திருந்தால் அவருக்கு ஓட்டு போடுங்கள்; இல்லையெனில் புறக்கணியுங்கள்.
விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் ஏற்படுத்தி தரப்படும் என கூறி, அவர்களையும் ஏமாற்றி உள்ளார். காய்கறிகள் விலையை குறைப்பதாக கூறினர். ஆனால் இதுவரை குறைக்கவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது.
சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் மதிப்பளிக்கும் காங்கிரசுக்கு ஆதரவு தாருங்கள். இம்முறை மோடியை நம்ப வேண்டாம். 'பொய்' தான் அவர்களுக்கு கடவுள். இவ்வாறு அவர் பேசினார்.
அனைவருக்கும் பலம்
துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அனைத்து தரப்பு மக்களுக்கும் பலம் கிடைத்ததற்கு சமம். கர்நாடகாவில் ஒரு அணையை கூட பா.ஜ., கட்டவில்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் அணைகள், பவர் ஹவுஸ், வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன.
கர்நாடகாவுக்கு கிடைக்க வேண்டிய வரியை வழங்காதது குறித்து, லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் பலமுறை கேள்வி எழுப்பி உள்ளார். ஆனால், இங்கிருந்து தேர்வான 25 பா.ஜ., - எம்.பி.,க்கள் ஒருவராவது இதுபற்றி கேட்டனரா? இவ்வாறு அவர் பேசினார்.