'ஓட்டுக்கு நோட்டு' கலாசாரம் 3 கட்சிகளுமே 'தாராளம்'
'ஓட்டுக்கு நோட்டு' கலாசாரம் 3 கட்சிகளுமே 'தாராளம்'
ADDED : மே 29, 2024 04:45 AM
லோக்சபா, சட்டசபை தேர்தல் போன்றே மேலவை தேர்தலிலும் வாக்காளர்களை கவருவதற்காக, பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., என மூன்று கட்சியினரும் அன்பளிப்புகளை வாரி வழங்குவதில் தாராளம் காட்டுகின்றனர்.
கர்நாடக மேலவையின் மூன்று ஆசிரியர், மூன்று பட்டதாரி தொகுதிகளுக்கு ஜூன் 3ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இத்தேர்தலில், காங்கிரஸ் தனித்து ஆறு இடங்களிலும், பா.ஜ., - ம.ஜ.த., மீண்டும் கூட்டணி அமைத்து முறையே நான்கு, இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
கர்நாடகாவில் கடந்தாண்டு பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. சட்டசபையில் கொண்டு வரப்படும் மசோதாவுக்கு சுலபமாக அங்கீகாரம் கிடைத்துவிடும். ஆனால், மேலவையில் காங்கிரசின் பலம் குறைவாக உள்ளதால், அங்கு மசோதாவுக்கு அங்கீகாரம் கிடைப்பது சந்தேகம்.
கவுரவ தேர்தல்
இதில் கருத்தில் கொண்டு ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. அதுபோன்று, பா.ஜ., - ம.ஜ.த.,வும் வெற்றி பெறுவதை கவுரவ பிரச்னையாக கருதுகின்றனர். அதை மனதில் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஆசிரியர், பட்டதாரி தொகுதி தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு, வாக்காளர்களுக்கு, 'அன்பளிப்பு' கொடுப்பது அதிகரித்துள்ளது.
கடந்த 16ம் தேதி பெங்களூரு ஆனேக்கல்லில் உள்ள தனியார் கூரியர் நிறுவன குடோனில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, பெங்களூரு பட்டதாரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராமோஜி கவுடா படம் பொறிக்கப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை கவருவதற்கு முன், தங்கள் கட்சி ஆதரவாளர்கள், தொண்டர்களுக்கு 'விருந்து' வைக்கின்றனர். இதனால் குஷியாகும் அவர்கள், வாக்காளர்களை சந்தித்து பிரசாரம் செய்வர் என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.
வாக்காளர்களை ஈர்க்க ஒருபுறம் பொருட்களாகவும்; மறுபுறம் பணத்துடன், கடவுள் படம் போட்ட, 'கவர்'கள் வழங்கப்பட்டு வருகின்றன. சில மாவட்டங்களில், வாக்காளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, பரிசு பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
பரிசு பொருட்கள்
புதிதாக பெயர்கள் பதிவு செய்தவர்களை, நேரடியாக வரவழைத்து அவர்களுக்கு மற்றவர்களை அதிகமான, 'மால்' வழங்கப்பட்டு வருகிறது.
தென் கிழக்கு ஆசிரியர் தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படும் ஆசிரியர் ஒருவர், கடந்த தேர்தலில் இதே வேட்பாளர் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் கொடுத்ததாகவும், இம்முறை, 10,000 ரூபாய் எதிர்பார்க்கின்றனர் எனவும் தெரிவித்தார். அதுபோன்று, தெற்கு ஆசிரியர் தொகுதியில், ஒரு ஓட்டுக்கு 25,000 ரூபாய் வரை சென்றுள்ளது.
கர்நாடகாவில் மேலவை தேர்தலில் 20 ஆண்டுகளுக்கு முன், வேட்பாளர் சார்பில், தனக்கு ஓட்டு போடும்படி, வாக்காளர்களுக்கு கடிதம் மட்டுமே சென்றது. ஆனால், இம்முறை பரிசு பொருட்கள் செல்ல துவங்கி உள்ளன.
தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற சிறந்த பிரதிநிதியை தேர்ந்தெடுக்க, ஆசிரியர்கள், பட்டதாரிகள் நினைக்கின்றனர். ஆனால், வேட்பாளர்களோ, மற்ற தேர்தல் போன்று, இதிலும் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்க துவங்கி உள்ளனர்.