ADDED : மே 16, 2024 12:19 AM

அமராவதி: ஆந்திராவில் நடந்து முடிந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு, 80.66 சதவீதத்தை தாண்டி உள்ளது.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் உள்ள 25 லோக்சபா மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 13ல் தேர்தல் நடந்தது.
காலை முதலே வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு திரளாக வந்து வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர். மக்கள் ஓட்டுப்போட அதிக ஆர்வமுடன் வந்தபோதும், பல ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைமுறை மெதுவாக இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
இதனால் ஓட்டுச்சாவடிகளில், 6 மணி வரை வரிசையில் நின்றவர்கள், தேர்தல் நேரம் முடிந்த பின்னரும், இரவு வரை ஓட்டுப்போட அனுமதிக்கப் பட்டனர்.
வெயிலை பொருட்படுத்தாமல் ஓட்டுப்போட அதிக எண்ணிக்கையில் வந்த மக்களுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நன்றி கூறினார். அதேபோல் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, மே 13 தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.
இந்நிலையில் ஓட்டுப்பதிவின் முழுமையான விபரங்களை தேர்தல் கமிஷன் தங்களின் இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.
அதன்படி ஆந்திராவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் 80.66 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. கடந்த 2019 தேர்தலில் பதிவான 79.83 சதவீதம் ஓட்டுகளை விட இது சற்றே அதிகம்.