sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேவகவுடா கூறிய கதையை நினைவுகூரும் வாக்காளர்கள்

/

தேவகவுடா கூறிய கதையை நினைவுகூரும் வாக்காளர்கள்

தேவகவுடா கூறிய கதையை நினைவுகூரும் வாக்காளர்கள்

தேவகவுடா கூறிய கதையை நினைவுகூரும் வாக்காளர்கள்


ADDED : ஏப் 19, 2024 06:25 AM

Google News

ADDED : ஏப் 19, 2024 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரசை பற்றி சுவாரஸ்யமான கதை மூலமாக முன்னாள் பிரதமர் தேவகவுடா விமர்சித்ததை, பலரும் நினைவு கூர்கின்றனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஆரம்ப காலத்தில் இருந்தே, காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்தவர். அக்கட்சியினரை விமர்சித்தபடி அரசியலில் வளர்ந்தவர். குறுகிய காலம் முதல்வராகவும், பிரதமராகவும் இருந்ததை தவிர, அவருக்கு வேறு எந்த அதிகாரமும் கிடைக்கவில்லை.

மாநில அளவில் காங்கிரசுக்கு சரி சமமாக, மாநில கட்சியை வளர்த்த பெருமை இவரை சாரும். பிரபல ஒக்கலிக தலைவராக வளர்ந்துள்ளார். ஒரு முறை காங்கிரஸ் ஆதரவுடன், பிரதமராக இருந்தார். மற்றொரு முறை காங்., ஒத்துழைப்புடன், தன் மகன் குமாரசாமி முதல்வராகும்படி பார்த்து கொண்டார். ஆனால் இரண்டு முறையும், அவருக்கு காங்கிரசால் கசப்பான அனுபவமே ஏற்பட்டது. அக்கட்சி மீது தேவகவுடாவுக்கு அதிக வெறுப்பு ஏற்பட்டது.

பா.ஜ.,வை மதவாத கட்சி என விமர்சித்த தேவகவுடா, அதே கட்சியுடன் கூட்டணி வைப்பார் என, யாரும் எதிர்பார்க்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியுடன் கைகோர்த்து, காங்கிரசுக்கு எதிரான யுத்தத்தில் இறங்கியுள்ளார். தேவகவுடாவை பொறுத்த வரை, காங்கிரஸ் மானம், மரியாதையை இழந்த கட்சியாகும். இது பற்றி அவர் சுவாரஸ்யமான கதையுடன் விமர்சித்ததை, தொண்டர்கள் இன்றும் மறக்கவில்லை.

கடந்த 1994 சட்டசபை தேர்தலில், தேவகவுடா ஜனதா தளத்தில் இருந்தார். அப்போது அவருக்கு பா.ஜ., போட்டியாளராக இல்லை. எதிராளி என்றால் அது காங்கிரஸ் மட்டுமே. தேர்தலை முன்னிட்டு, குடகு, மடிகேரியின் காந்தி மைதானத்தில் ஜனதா தளம் மாநாடு நடந்தது. இதில் அவரது பேச்சை கேட்க, மக்கள் கூட்டம் குவிந்திருந்தது. மாநாட்டில் இவர் கதை மூலமாக, காங்கிரசை குத்தி கிழித்தார்.

அவர் கூறிய கதை:

வாரம் ஒரு முறை நடக்கும் சந்தைக்கு மூன்று பெண்கள் சேர்ந்து செல்வர். சந்தைக்கு செல்லும் போது, ஒரு பெண், தன் கணவருக்கு குடை வாங்குவார். மற்றொரு பெண் செருப்பு வாங்குவார். பலமுறை இதே போன்று நடந்தது. உடனிருந்த மூன்றாவது பெண்ணுக்கு, இவர்கள் ஏன் செருப்பு, குடை வாங்குகின்றனர் என்ற கேள்வி குடைந்தெடுத்தது.

ஆர்வம் தாங்காமல் அந்த இரு பெண்களிடமும், 'நானும் பார்க்கிறேன். நீங்கள் சந்தைக்கு வரும் போதெல்லாம், குடை, செருப்பு வாங்குகிறீர்களே ஏன்' என ஆச்சரியத்துடன் கேட்டார். அப்போது ஒரு பெண், 'என் கணவருக்கு மறதி அதிகம். செல்லும் இடங்களில் குடையை மறந்துவிட்டு வருகிறார். எனவே குடை வாங்குகிறேன்' என பதிலளித்தார்.

அதேபோன்று, இரண்டாவது பெண், 'என் கணவரின் கதையும் இதுதான். செருப்பை மறந்து விடுகிறார். எனவே ஒவ்வொரு முறையும், சந்தைக்கு வரும் போது செருப்பு வாங்கி செல்கிறேன்' என்றார்.

அப்போது அந்த இரண்டு பெண்களும், மூன்றாவது பெண்ணிடம், 'உங்கள் கணவர் எதையும் மறந்து வருவதில்லையா' என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர்.

அப்போது அப்பெண், 'உங்கள் கணவர் குடை, செருப்பை தொலைக்கிறார். சந்தையில் புதிதாக வாங்குகிறீர்கள். ஆனால், என் கணவர் செல்லும் இடங்களில் எல்லாம், மானம், மரியாதையை தொலைத்துவிட்டு வருகிறார். இதை சந்தையில் வாங்க முடியுமா' என பதிலளித்தாராம்.

கதையில் மானம், மரியாதையை இழந்த கணவரை, காங்கிரசுடன் தேவகவுடா ஒப்பிட்டு பேசினார். கூட்டத்தில் இருந்தவர்கள் கை தட்டியும், விசில் அடித்தும் அவரது கதையை ரசித்தனர்.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் பல தலைவர்கள், எதிரணியினரை பற்றி சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிக்கின்றனர். ஆனால், தேவகவுடா வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று, காங்கிரசை விமர்சித்தார்

.- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us