போர் பதற்றம்! இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்: பதிலடியாக இஸ்ரேல் விமானங்களும் குண்டுமழை
போர் பதற்றம்! இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்: பதிலடியாக இஸ்ரேல் விமானங்களும் குண்டுமழை
ADDED : ஆக 26, 2024 12:52 AM

ஜெருசலேம்: இஸ்ரேலை குறிவைத்து, 320 ஏவுகணைகளை செலுத்தியதாக, லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, 100 போர் விமானங்கள் நடுவானிலேயே அவற்றை தகர்த்தெறிந்தன என, இஸ்ரேல் கூறியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்களை குறிவைத்து, இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இந்த தாக்குதல்கள், மேற்கு ஆசியாவில் மீண்டும் பெரும் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
மேற்கு ஆசியாவில் உள்ள இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே, கடந்தாண்டு அக்டோபரில் போர் துவங்கியது.
இந்தப் போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடக்கும் நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, ஹிஸ்புல்லா உட்பட பல பயங்கரவாத அமைப்பு கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இந்த அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லாஅமைப்பின் நிறுவனங்களில் ஒருவரான பாத் சுகுர், லெபனானின் பெய்ரூட்டில் கொல்லப்பட்டார்.
பதுங்கு குழி
இதற்கிடையே ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனீயா, ஈரானின் டெஹ்ரானில் கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரித்திருந்தது.
இந்நிலையில், ஹிஸ்புல்லா மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக, இஸ்ரேல் நேற்று அதிகாலை தெரிவித்தது.
இதையடுத்து, நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவித்தது. மேலும், நம் எல்லையில் முக்கியமான சூழ்நிலை உள்ளதால், அடுத்த, 48 மணி நேரத்துக்கு அவசரநிலை அமல்படுத்துவதாகவும் அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில், லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது தாக்குதலை துவக்கியதாக ஹிஸ்புல்லா அறிவித்தது.
இஸ்ரேல் நோக்கி, 320 கட்யுஷா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்களை செலுத்தியதாகவும், அவை வெற்றிகரமாக, இஸ்ரேலின் 11 இடங்களில் உள்ள ராணுவ முகாம்கள், பதுங்கு குழிகளை அழித்ததாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
அதற்கடுத்து வெளியிட்ட மற்றொரு செய்தியில், தங்களுடைய முதல் துவக்க தாக்குதல் முடிவுக்கு வந்ததாகவும், அடுத்தக்கட்ட தாக்குதல் தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் ஹிஸ்புல்லா கூறியது.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், 100 விமானப்படை போர் விமானங்கள் உடனடி பதிலடியில் ஈடுபட்டு, ஹிஸ்புல்லாஅனுப்பிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நடுவானிலேயே தகர்த்தன என்று கூறியுள்ளது.
லெபனான், இஸ்ரேல், சிரியா எல்லையில் உள்ள கோலான் குன்றுகள் பகுதியில் இந்த தாக்குதல்கள் நடந்தன.
மேலும், லெபனானின் தென் பகுதியில், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் பகுதிகளையும் போர் விமானங்கள் தாக்கியதாக, இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, நிலவரத்தை கண்காணித்து வருவதாகவும், இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளது.
அபாயம்
இந்த தாக்குதல், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஈரானும் தாக்குதலில் ஈடுபடத் துவங்கினால், மேற்கு ஆசியாவில் மிகப் பெரும் போராக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுஉள்ளது.
இரு தரப்பு தாக்குதல்களில் ஏற்பட்ட சேதம், உயிரிழப்பு தொடர்பாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
அதே நேரத்தில், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையேயான இந்த மோதல், மேற்காசியாவில் மீண்டும் பெரும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கிஉள்ளது.