ADDED : ஆக 30, 2024 09:52 PM

சித்ரதுர்கா : மனைவியை இஸ்திரி பெட்டியால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய கணவர், மாமனாரை போலீசார் தேடுகின்றனர்.
சித்ரதுர்கா மாவட்டம், மொலகால்மூரில் வசிப்பவர் நாகேஷ், 30. இவரது மனைவி பூஜா, 24. சமீப நாட்களாக மனைவி நடத்தையில் நாகேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது. யாருடன் மொபைல் போனில் பேசினாலும், மனைவியை அடித்துத் துன்புறுத்தினார். இதற்கு நாகேஷின் தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, பூஜா மொபைல் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்து கோபமடைந்த நாகேஷ், 'கண்டவர்களுடன் போனில் பேசுகிறாயா?' என கேட்டுத் தாக்கினார். தன் தந்தையுடன் சேர்ந்து இஸ்திரி பெட்டியால், பூஜாவுக்கு சூடு வைத்தார். இதில் பூஜாவின் வலதுபுற கன்னம், வலது தொடை, முதுகு, இடது கை என உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின், ஓரளவு குணமடைந்த பூஜா, தன் பெற்றோரின் உதவியுடன், மொலகால்மூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கி உள்ளனர். இதையறிந்த நாகேஷும், அவரது தந்தையும் தலைமறைவாகி விட்டனர். இவர்களை போலீசார் தேடுகின்றனர்.