எச்சரிக்கை! ஆப்ரிக்காவில் வேகமாக பரவுகிறது 'மங்கி பாக்ஸ்'
எச்சரிக்கை! ஆப்ரிக்காவில் வேகமாக பரவுகிறது 'மங்கி பாக்ஸ்'
ADDED : ஆக 17, 2024 12:17 AM

புதுடில்லி: ஆப்ரிக்காவில் வேகமாக பரவி வரும், 'மங்கி பாக்ஸ்' தொற்று பரவலை, உலகளவில் கவலை அளிக்கக்கூடிய பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதை சாதாரணமாக கையாண்டால், உலகம் முழுதும் பரவி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
'எம்பாக்ஸ்' என்று அழைக்கப்படும், 'மங்கி பாக்ஸ்' தொற்று, 1958ல் முதன்முதலில் குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. அதன்பின், 1970ல் மனிதர்களிடையே இந்த தொற்று பரவல் கண்டறியப்பட்டது.
வனப்பகுதிகளில் வாழும் பாலுாட்டிகளிடம் இருந்து இந்த வகை தொற்று பரவுவதாக கூறப்படுகிறது. ஆப்ரிக்க நாடுகளில் இந்த தொற்றுப் பரவல் அதிகம் தென்பட்டதால், மற்ற நாடுகள் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எனவே, இந்த தொற்றுக்கான தடுப்பூசி மற்றும் சிகிச்சை குறித்த ஆய்வுகள் மந்தமாகவே இருந்தன.
கடந்த 2022ல் வளர்ந்த நாடுகளிலும் மங்கி பாக்ஸ் பரவத் துவங்கியதை அடுத்து ஆய்வுப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டன. உலகம் முழுதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆப்ரிக்க நாடுகளில் கடந்த ஆண்டு ஜனவரி முதல், மங்கி பாக்ஸ் பரவல் மிக மோசமாக உள்ளன. இதுவரை 27,000 தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 1,100 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதை தொடர்ந்து, மங்கி பாக்ஸ் தொற்றை, சர்வதேச அளவில் கவலை அளிக்கக்கூடிய தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக சர்வதேச அளவிலான சுகாதார அவசர நிலையையும் அறிவித்துள்ளது.
இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டால், உலகம் முழுதும் பரவி மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக எச்சரித்துள்ளது.
மங்கி பாக்ஸ் தொற்றில் இரண்டு வகையான திரிபுகள், மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் இருந்து தற்போது பரவி வருகின்றன.
பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்படும் நாளில் இருந்து, 1 முதல் 21 நாட்களுக்குள்ளாக அறிகுறிகள் தென்பட துவங்கும். இந்த அறிகுறிகள், பொதுவாக 2 - 4 வாரங்கள் வரை தொடரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு நான்கு வாரங்களையும் கடந்து அறிகுறிகள் தென்படும்.

