ADDED : ஜூலை 24, 2024 11:25 PM
பெங்களூரு : கர்நாடகாவில் டெங்குவைத் தொடர்ந்து 'நிபா' தொற்றும் மக்களை அச்சுறுத்துகிறது. இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் அறிவுறுத்துகின்றனர்.
மாநிலத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால், நடப்பாண்டு டெங்கு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் 409 பேருக்கு டெங்கு ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் நேற்று முன் தினம் ஒரே நாளில், 181 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.
இதை கட்டுப்படுத்துவது குறித்து, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனை கேட்டறிகின்றனர்.
இதற்கிடையில் நிபா தொற்றும், மக்களை அச்சுறுத்துகிறது. ஏற்கனவே அண்டை மாநிலமான கேரளாவில், நிபா தொற்றுக்கு, 14 வயது சிறுவன் உயிரிழந்தார். இதனால் எல்லைப்பகுதியில் கர்நாடக அரசு, 'ஹை அலெர்ட' அறிவித்துள்ளது.
இது வவ்வால்களிடம் இருந்து, மனிதர்களுக்கு பரவும் தொற்றாகும். மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும்.
கொரோனாவை போன்று, நிபா தொற்றை குணப்படுத்த குறிப்பிட்ட எந்த சிகிச்சையும் இல்லை. எனவே கர்நாடக அரசு உஷாராகி, நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எல்லைப்பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து, கர்நாடகாவுக்கு வரும் மக்களுக்கு, மருத்துவ பரிசோதனை நடத்த, சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
மருத்துவ வல்லுனர்கள் கூறியதாவது:
நிபா தொற்று ஏற்பட்ட நபருக்கு, முதலில் காய்ச்சல் வரும். தலைவலி, வாந்தி, மூச்சுத்திணறல் ஏற்படும். அதன்பின் மூளை பாதிப்படைந்து, 'கோமா' நிலைக்கு சென்று உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
மக்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. நோய் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக டாக்டரிடம் சென்று, பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும். நோய் தாக்கிய பின், சிகிச்சை பெறுவதை விட நோய் வராமல் தடுப்பது புத்திசாலித்தனம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

