தனியார் வாகனத்தில் அரசு முத்திரை வழக்கு பாயும் என எச்சரிக்கை
தனியார் வாகனத்தில் அரசு முத்திரை வழக்கு பாயும் என எச்சரிக்கை
ADDED : மே 28, 2024 06:04 AM
பெங்களூரு: தனியார் நிறுவனங்கள் மீது அரசு முத்திரை மற்றும் சின்னங்கள் பொருத்தப்படுவதை கட்டுப்படுத்த, போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் தங்களின் வாகனங்களின் மீது, சட்டவிரோதமாக அரசு முத்திரை, சின்னங்களை பொருத்தியுள்ளனர்.
இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
தனியார் நிறுவனங்கள், நபர்கள் தங்களின் வாகனங்களில் சட்டவிரோதமாக அரசு முத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இதற்கு கடிவாளம் போட, போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
தனியார் வாகனங்கள் மீது, அரசு முத்திரை இருப்பது தொடர்பாக நுாற்றுக்கணக்கான புகார்கள் வந்துள்ளன. இத்தகைய வாகனங்களில் பொருத்தப்பட்ட அரசு முத்திரையை அகற்ற, போக்குவரத்து துறை, ஏழு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளன. இந்த குழுக்கள், ஜூன் 1 முதல் செயல்படும்.
தங்கள் வாகனத்தில் அரசு முத்திரை வைத்திருந்தால் முதல் முறையாக 500 ரூபாய், இரண்டாவது முறையாக 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதன் பின்னரும், அதே தவறை செய்தால், வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
போக்குவரத்து துறை விதிப்படி, அரசு வாகனங்களில் மட்டுமே, அரசு முத்திரையை பயன்படுத்த அனுமதி உள்ளது. அரசு கட்டுபாட்டில் வரும் கார்ப்பரேஷன், வாரியங்கள், மாநகராட்சிகளின் வாகனங்களில் பொருத்த அனுமதி இல்லை.
கே.எஸ்.ஆர்.டி.சி.,யாக இருத்தாலும், சட்டவிரோதமாக அரசு முத்திரை பொருத்தியுள்ள வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.