ADDED : ஜூன் 06, 2024 04:04 AM

ஹாசன் : பட்டப்பகலில் ரவுடி கொலை செய்யப்பட்டதால், பதற்றமான சூழ்நிலை உருவானது.
ஹாசன் நகரின், ஹேமாவதி நகர் லே அவுட்டில் வசித்தவர் ரவுடி சைல்டு ரவி, 45. இவர் தன் வீட்டுக்கு குடிநீர் கொண்டு வர, பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்தில் அவரை பின் தொடர்ந்த மர்ம கும்பல், பைக் மீது மோதியது.
கீழே விழுந்த அவரை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்க துவங்கினர். தப்பியோட முயற்சித்தும் முடியவில்லை. அவரை கொலை செய்த மர்ம கும்பல் தப்பியோடியது. பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை, அப்பகுதியினரை பீதியில் ஆழ்த்தியது. தகவலறிந்து அங்கு வந்த ஹாசன் நகர் போலீசார், ரவுடி உடலை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ரவுடி சைல்டு ரவி, கடந்தாண்டு நடந்த ஸ்லம் மஞ்சா கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உட்பட பல குற்றங்களில் ஈடுபட்டவர். போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர், இரண்டு மாதங்களுக்கு முன், ஜாமினில் வெளியே வந்தார்.
முன் விரோதம் காரணமாக, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.