குடிநீர் மேலாண்மை கூட்டம்; தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
குடிநீர் மேலாண்மை கூட்டம்; தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
ADDED : மே 10, 2024 11:01 PM

பெங்களூரு : வறட்சி, குடிநீர் மேலாண்மை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு, தேர்தல் நடத்தை விதிகளில் விலக்கு அளிக்கக்கோரி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதி உள்ளார்.
அவர் எழுதிய கடிதம்: கர்நாடகாவில் உள்ள 236 தாலுகாக்களில், 223 தாலுகாக்கள் ஏற்கனவே வறட்சி தாலுகாக்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அனைத்து தாலுகாக்களிலும் குடிநீர் பிரச்னை மோசமடைந்து உள்ளது.
அத்துடன் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணக்கின்படி, மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை தாமதமாக பெய்யும் என்று அறிவித்துள்ளது.
எனவே, வரும் இரண்டு மாதங்களுக்கு மக்கள், கால்நடைகளுக்கு சுத்தமான, போதுமான குடிநீர் வழங்குவது இன்றியமையாதது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். இதற்கு தற்போதைய லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் தடையாக உள்ளன. இக்கூட்டத்தை நடத்தி அறிவிப்புகள் வெளியிட, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.