ஐயா சாமி, நீங்க வரவே வேண்டாம்; கையெடுத்து கும்பிடுகிறது வயநாடு மாவட்ட நிர்வாகம்!
ஐயா சாமி, நீங்க வரவே வேண்டாம்; கையெடுத்து கும்பிடுகிறது வயநாடு மாவட்ட நிர்வாகம்!
ADDED : ஆக 20, 2024 07:05 AM

திருவனந்தபுரம்: வயநாட்டில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலை கிராமங்களுக்கு பார்வையாளர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30ல் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி, 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 225 பேர் மாயமாகினர்.
பாதுகாப்பு கருதி, முண்டக்கை மற்றும் சூரல்மலை கிராமங்களுக்கு பார்வையாளர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை வேடிக்கை பார்க்க தினமும் நுாற்றுக்கணக்கான பேர் வருவதாலும், மீட்பு, நிவாரண பணிக்கு தொல்லையாக இருப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இடிந்து விழும் அபாயம்
இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் மேகஸ்ரீ.டி.ஆர் கூறியதாவது: அருகேயுள்ள தமிழகம், கர்நாடகாவில் இருந்து தினமும் ஏராளமான பேர் வயநாடு வருகின்றனர். அவர்களால் ஏற்படும் இடையூறு சொல்லி மாளாது. எனவே இப்போதைக்கு யாரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாது. தயவு செய்து வர வேண்டாம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் பாலத்தின் நுழைவாயிலில் போலீசார் தடுப்புகள் வைத்துள்ளனர். அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மட்டுமே கிராமங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
பெரும்பாலான வீடுகள் சேதம் அடையாமல் இருந்தாலும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. புஞ்சிரிமட்டம், அட்டமலை பகுதிகளில் அனுமதியின்றி நுழைவதை தடுக்க வனத்துறையினர் வனப்பகுதிகளில் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.
நீர்வீழ்ச்சி
தெற்கு வயநாடு கோட்ட வன அலுவலர் அஜித் கே ராமன் கூறிதாவது: காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அத்துமீறி நுழைவதை தடுக்க இரவு ரோந்து பணிக்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி கிடையாது என்றார்.