'எங்கள் வாயை அடைக்க முடியாது' முதல்வர் மீது அசோக் பாய்ச்சல்
'எங்கள் வாயை அடைக்க முடியாது' முதல்வர் மீது அசோக் பாய்ச்சல்
ADDED : ஜூன் 01, 2024 06:42 AM

பெங்களூரு: ''நான்கு வார்த்தை அகங்காரத்துடன் பேசி, எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கலாம் என நினைத்தால், அது முதல்வரின் மன பிரமை,'' என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தெரிவித்தார்,
இதுதொடர்பாக, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்றைய அவர் பதிவு:
நீங்கள் (முதல்வர் சித்தாமையா) நான்கு வார்த்தைகள் அகங்காரத்துடன் பேசி, எதிர்க்கட்சியினரின் வாயை அடைக்கலாம் என்பது, உங்களின் மன பிரமை. பிரமை லோகத்திலேயே வசியுங்கள்.
உங்களின் பேச்சு, வெட்கக்கேடானது. முதல்வர் பதவியில் உள்ளீர்கள் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். ஜூன் 4ல் யார், யாரிடம் உருட்டுக்கட்டை அடி வாங்குவர், ஜூன் 4க்கு பின், மண்வெட்டியால் அடித்து, யார், யாரை நாற்காலியில் இருந்து கீழே இறக்குவர் என்பதை பார்க்கலாம்.
நீங்கள் அபூர்வமாக ஆழ்ந்த நித்திரையில் இருந்து எழுந்து, என் கேள்விக்கு பதிலளிக்க சிரமப்பட்டுள்ளீர்கள். அதற்காக என் பாராட்டுகள். உடல் முழுதும் எண்ணெய் தடவிக் கொண்டவரை போன்று, உங்கள் கடமையில் இருந்து நழுவிக்கொண்டு, மத்திய அரசு மீது குற்றம் சாட்டுகிறீர்கள். உங்கள் முட்டாள் தனத்தை பற்றி என்ன சொல்வது?
கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு, நாளிதழ்களில் பக்கம், பக்கமாக விளம்பரம் கொடுத்தால், அது உங்கள் திட்டம். பச்சைக்கொடி காண்பித்து பஸ்சை துவக்கி வைத்தால், அது உங்கள் அரசின் சாதனை. இவற்றில் குளறுபடி நடந்தால் மட்டும், மத்திய அரசின் பொறுப்பா, இது எந்த விதத்தில் நியாயம்? அனைத்துக்கும் மத்திய அரசின் மீது குற்றம் சாட்ட, மக்கள் உங்களை ஆட்சியில் அமர்த்தவில்லை.
உங்களுக்கு உண்மையாகவே, கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தால், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, கூறி இருக்கலாமே.
இவ்வாறு அவர் கூறினார்.