'ஆஸ்ட்ராஜெனகா' மீது வழக்கு தொடருவோம் மகள் இறந்ததால் தந்தை உருக்கமான பதிவு
'ஆஸ்ட்ராஜெனகா' மீது வழக்கு தொடருவோம் மகள் இறந்ததால் தந்தை உருக்கமான பதிவு
ADDED : மே 04, 2024 12:05 AM

புதுடில்லி,'கோவிஷீல்டு' தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் உயிரிழந்ததாக கூறப்படும், 20 வயதான காருண்யாவின் பெற்றோர், பிரிட்டனை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான, 'ஆஸ்ட்ராஜெனகா' மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான, பிரிட்டனை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான, ஆஸ்ட்ராஜெனகாவும், ஆக்ஸ்போர்டு பல்கலையும் இணைந்து, 'வாக்ஸ்செவ்ரியா' என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியை தயாரித்தது.
பக்கவிளைவு
இந்த தடுப்பூசியை தயாரித்து வினியோகிக்கும் உரிமம், மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த, 'சீரம் இந்தியா' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த நிறுவனம், கோவிஷீல்டு என்ற பெயரில் இந்த மருந்தை தயாரித்து இந்தியாவில் வினியோகித்தது. ஐரோப்பாவில், ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை போட்டுக்கொண்ட பலர் திடீரென உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பிரிட்டன் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் சமீபத்தில் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
அதில், இந்த தடுப்பூசி, 'த்ராம்போசிஸ் மற்றும் த்ராம்போசைடோபீனியா' எனப்படும், நாளங்களில் ரத்தம் உறைதல் மற்றும் ரத்த தட்டணு குறைதல் உள்ளிட்ட பக்கவிளை வுகளை மிகவும் அரிதாக ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வேணுகோபாலன் கோவிந்தன் என்பவரது 20 வயது மகள் காருண்யா, 2021ல் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட சில நாட்களில் திடீரென உயிரிழந்தார். அவரைப் போலவே, ரச்சனா கங்கு என்பவரது 18 வயது மகள் ரிதாய்காவும் 2021ல் உயிரிழந்தார்.
இவர்கள் இருவரும் தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் உயிரிழந்ததை ஆய்வு செய்ய மருத்துவ குழுவை அமைக்க உத்தரவிடும்படி உச்ச நீதிமன்றத்தை இவர்கள் ஏற்கனவே நாடியுள்ளனர்.
ஒப்புதல் வாக்குமூலம்
இந்நிலையில், ஆஸ்ட்ராஜெனகாவின் ஒப்புதல் வாக்குமூலம் இவர்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இது தொடர்பாக, வேணுகோபாலன் கோவிந்தன் எழுதியுள்ள சமூகவலைதள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏராளமான உயிர்கள் பறிபோன பின், மிக தாமதமாக அந்நிறுவனம் இதை ஒப்புக் கொண்டுள்ளது.
ரத்த உறைவால் பல உயிர்கள் பறிபோன பின், 15க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திக் கொண்ட போதே, கோவிஷீல்டு வினியோகத்தை சீரம் இந்தியா நிறுவனம் நிறுத்தி இருக்க வேண்டும்.
பொது சுகாதாரம் என்ற பெயரில் வினியோகம் மீண்டும் தொடர்ந்து, மேலும் பல உயிர்கள் பறிபோவதை தடுக்கும் நோக்கத்தில், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் உட்பட இதில் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.
என்னைப் போலவே தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த எட்டுக்கும் மேற்பட்ட பெற்றோர் என்னுடன் இணைந்துஉள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.