இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா
இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா
ADDED : ஏப் 21, 2024 02:06 AM

ஜெய்ப்பூர், ''ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக, காங்., உள்ளது. எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., பிரிவுகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் ரத்து செய்ய நினைத்தாலும், பா.ஜ., அதை ஒருபோதும் அனுமதிக்காது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
ராஜஸ்தானில், முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு மொத்தம், 25 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், 12 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. கோட்டா உட்பட 13 தொகுதிகளுக்கு, வரும் 26ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
கோட்டா தொகுதியில் போட்டியிடும் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உட்பட, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், கட்சி மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:
எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., பிரிவுகளுக்கான இட ஒதுக்கீட்டை காங்., ரத்து செய்ய நினைத்தாலும், நாங்கள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஓ.பி.சி., பிரிவுக்கு எதிரான மனநிலையை, காங்., கொண்டுள்ளது. மண்டல் கமிஷன் அறிக்கையை காங்., அரசு அமல்படுத்தவில்லை.
பார்லி.,யில் இட ஒதுக்கீடு குறித்த விவாதத்தின் போது, ராகுல் தந்தை ராஜிவ் அதற்கு எதிராக இரண்டரை மணி நேரம் பேசினார். நாட்டில் உள்ள அனைத்து மத்திய நிறுவனங்களிலும், ஓ.பி.சி., பிரிவுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நாங்கள் உழைத்தோம்.
பிரதமர் மோடி தலைமையின் கீழ், நாட்டின் அந்தஸ்து உலகம் முழுதும் அதிகரித்துள்ளது. அவரும், ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்தவர் தான்.
ஓட்டு வங்கியை இழக்க நேரிடும் என்ற காரணத்தால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் காங்., தலைவர்கள் பங்கேற்கவில்லை. ஓட்டு வங்கி பேராசையால் கடவுள் ராமரை பார்க்காதவர்களை, பொது மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைக்கும் ஒரே தலைவர் மோடி தான். அவரை மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக்க வேண்டிய பொறுப்பு வாக்காளர்களாகிய உங்களிடம் உள்ளது. இந்தியாவில் மீண்டும் பா.ஜ., தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்பது, ஒட்டு மொத்த உலகிற்கே தெரிந்து விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.

