பெங்களூரில் வானிலை மாற்றம் தொண்டை தொற்று அதிகரிப்பு
பெங்களூரில் வானிலை மாற்றம் தொண்டை தொற்று அதிகரிப்பு
ADDED : மே 13, 2024 06:20 AM
பெங்களூரு: பெங்களூரில் மூன்று மாதங்களாக சுட்டெரித்த வெயிலால் அவதிப்பட்ட மக்கள், தற்போது திடீரென வானிலை மாற்றத்தால், தொண்டை தொற்றால் அவதிப்பட்டு வருகின்றனர்.
கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் நடப்பாண்டு பிப்ரவரி முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
வரலாறு காணாத அளவில் பெங்களூரில் வெயிலின் வெப்பம் பதிவானது.
வெயிலால் பாதித்த மக்களுக்கு இதமாக, கடந்த நான்கைந்து நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதனால் நிம்மதியடைந்தவர்கள், தற்போது தொண்டை தொற்றால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது:
வானிலை மாற்றத்தால், தொண்டையில் தொற்று ஏற்படுவது சகஜம். திடீரென குளிர்ந்த உணவுகள் உண்பது, அதிக தண்ணீர் குடிப்பதால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
வானிலை மாற்றத்தை நமது உடல் உடனடியாக ஏற்றுக் கொள்ளாது. வறண்ட தொண்டை, மூச்சு விடுதில் சிரமம், தலைவலி, அலர்ஜி போன்றவை தொண்டை தொற்று அறிகுறியாகும்.
தற்போது நகரில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக நடுத்தர வயதினர் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, முடிந்தவரை சாலையோர கடைகளில் உணவு உண்பதை தவிர்க்கவும்.
மழை காலத்தில் ஈரமான உடை, உள்ளாடை அணிவது, தண்ணீர் தொடர்பான இடங்களில் பணியாற்றுவதாலும், 'பூஞ்சை தொற்று' ஏற்படுகிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
சருமத்தில் வெள்ளை திட்டுகள், வறண்ட சருமம், அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.