மைசூரு அரசு மருத்துவமனையில் 'டயாலிசிஸ்' சிகிச்சைக்கு வரவேற்பு
மைசூரு அரசு மருத்துவமனையில் 'டயாலிசிஸ்' சிகிச்சைக்கு வரவேற்பு
ADDED : ஆக 16, 2024 10:53 PM
மைசூரு : மைசூரு மாவட்ட மருத்துவமனையில், திறக்கப்பட்ட இலவச டயாலிசிஸ் சேவைக்கு, நோயாளிகளிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே கூடுதல் இயந்திரங்கள் வழங்கும்படி, அரசிடம் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மைசூரு நகரின், மாவட்ட மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன், இலவச டயாலிசிஸ் யூனிட் துவக்கப்பட்டது. ஆரம்பமான புதிதில் தினமும் நான்கைந்து நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெற வந்தனர்.
தற்போது 12 பேர் வருகின்றனர். இதனால் யூனிட்டுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. நோயாளிகளின் வசதிக்காக, கூடுதல் இயந்திரங்கள் வழங்கும்படி, அரசிடம் மைசூரு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:
ஏ.பி.எல்., - பி.பி.எல்., கார்டுதாரர்கள், ஏழைகள், பணக்காரர்கள் என, அனைவருக்கும் இங்கு இலவச டயாலிசிஸ் சேவை கிடைக்கிறது. அதிநவீன உபகரணங்கள், சிறப்பு டாக்டர்கள், தொழில் நுட்ப ஊழியர்கள், டயாலிசிஸ் மையத்தில் உள்ளனர்.
மாவட்ட மருத்துவமனையின், ஐ.சி.யு., பிரிவு அருகிலேயே, டயாலிசிஸ் யூனிட் உள்ளது. விசாலமான அறையில் டயாலிசிஸ் சேவை வழங்கப்படுகிறது. இங்கு ஐந்து டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நான்கு இயந்திரங்கள் அனைத்து நோயாளிகளுக்கும், ஒரு இயந்திரம் ஹெச்.ஐ.வி. பாதிப்புள்ள நோயாளிக்கும் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
உடலின் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி, ரத்தத்தை சுத்தமாக்குகின்றன. இது பில்டர் போன்று செயல்படும் மருத்துவ சாதனமாகும். இத்தகைய இயந்திரங்கள் பயன்படுத்துவதால், மற்றவருக்கு தொற்று பரவுவதை தடுக்கின்றன.
சிறுநீரக பாதிப்பால் அவதிப்படும் நோயாளிகளுக்கு தரமான, இலவச டயாலிசிஸ் கிடைப்பதால், ஏழைகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது. 10 ரூபாய் கொடுத்து வெளி நோயாளி சீட்டு பெற்று வந்தால் போதும். இலவச டயாலிஸ் சிகிச்சை கிடைக்கிறது. தற்போது மூன்று ஷிப்டுகளில், 12 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், டயாலிசிஸ் இயந்திரங்கள் போதவில்லை. கூடுதல் இயந்திரங்கள் வழங்கும்படி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.