மீண்டும் தடுக்கி விழுந்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா
மீண்டும் தடுக்கி விழுந்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா
ADDED : ஏப் 28, 2024 12:08 AM

துர்காபுர்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மீண்டும் தடுக்கி விழுந்தார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 42 லோக்சபா தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. முதலிரண்டு கட்ட ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், மே 7ல் மூன்றாம் கட்ட தேர்தல் நடக்கிறது.
முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, பாஸ்சிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள துர்காபுரில், நேற்று தேர்தல் பிரசாரத்தை முடித்தார். பின், அதே மாவட்டத்தில், 41 கி.மீ., தொலைவில் உள்ள அசன்சோல் நகருக்கு, ஹெலிகாப்டரில் செல்ல, அவர் திட்டமிட்டு இருந்தார்.
இதன்படி, படிக்கட்டு களில் ஏறி ஹெலிகாப்டருக்குள் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதைப் பார்த்த அவரது பாதுகாவலர்கள், உடனடியாக அவரை மீட்டு முதலுதவி அளித்தனர்.
இதில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முதலுதவிக்கு பின், ஹெலிகாப்டரில் அவர் புறப்பட்டுச் சென்றார். ஹெலிகாப்டருக்குள் முதல்வர் மம்தா பானர்ஜி தடுக்கி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
கடந்த மார்ச்சில், கோல்கட்டாவில் உள்ள வீட்டில், முதல்வர் மம்தா பானர்ஜி தவறி விழுந்தார். இதில் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் தொடர்பாக சர்ச்சையும் ஏற்பட்டது. தற்போது மீண்டும் அவர் தடுக்கி விழுந்துள்ளார்.
இதற்கிடையே, குல்டி என்ற இடத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா, ''மேற்கு வங்கத்தில் பொம்மை வெடி வெடித்தால் கூட, உடனடியாக சி.பி.ஐ., - என்.ஐ.ஏ., போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு இங்கு அனுப்பி வைத்து விடும்.
''மேற்கு வங்க அரசை முடக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய பா.ஜ., அரசு மேற்கொண்டு வருகிறது,'' என்றார்.

