கர்நாடகாவுக்கு என்ன செய்தீர்கள்? பிரதமர் மோடிக்கு முதல்வர் கேள்வி
கர்நாடகாவுக்கு என்ன செய்தீர்கள்? பிரதமர் மோடிக்கு முதல்வர் கேள்வி
ADDED : ஏப் 14, 2024 06:57 AM

மைசூரு: ''இன்று மைசூரு வரும் பிரதமர் மோடி, மாநிலத்துக்கு செய்தது என்ன என்பதை சொல்ல வேண்டும்,'' என, முதல்வர் சித்தராமையா சவால் விடுத்தார்.
இரண்டு நாட்களாக மைசூரில் முகாமிட்டுள்ள முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:
மைசூரு வரும் பிரதமர் மோடி, கர்நாடகாவுக்கு செய்த பங்களிப்பு என்ன என்பதை சொல்ல வேண்டும். பிரசாரத்துக்கு வருவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க, என்ன செய்யப்பட்டு உள்ளது?
வரி வினியோகத்தில் கர்நாடகத்துக்கு அநீதி இழைத்துள்ளார். அதை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதுவரை வறட்சி நிவாரணம் வழங்காதது ஏன் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
அம்பேத்கர் சட்டத்தை மாற்றுவேன் என கூறிய பா.ஜ., - எம்.பி., அனந்த குமார் ஹெக்டே மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை; அவரை ஏன் பதவியில் இருந்து நீக்கவில்லை?
உத்தர கன்னடாவில் எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை. வீட்டிலேயே அமர்ந்திருந்தார். தேர்தல் நேரத்தில் வெளியே வந்தார். தோற்கப்போவதாக தெரிய வந்ததும், அவருக்கு சீட் வழங்கவில்லை.
ராமேஸ்வர் கபே குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்த என்.ஐ.ஏ., மற்றும் மாநில போலீசுக்கு வாழ்த்துகள்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாட்டில் பெரும்பான்மை கிடைக்காது. 'இண்டியா' கூட்டணி பெரும்பான்மை பெறும். மாநிலத்தில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

