மம்தாவுக்கு என்னாச்சு?: விழுந்து விழுந்து ஏன் எழுகிறார்?
மம்தாவுக்கு என்னாச்சு?: விழுந்து விழுந்து ஏன் எழுகிறார்?
UPDATED : ஏப் 27, 2024 03:15 PM
ADDED : ஏப் 27, 2024 02:57 PM

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஏப்ரல் 27) ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார். இவர் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைவது வழக்கமானதாக ஆகிவிட்டது. உடல்நிலையை கவனமாக பார்த்து கொள்ளுமாறு மம்தாவுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த மாதம் கோல்கட்டாவின் காளிகாட் பகுதியில் உள்ள தன் வீட்டில், மம்தா பானர்ஜி தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவர் படுகாயம் அடைந்து மயங்கினார். மருத்துவமனையில் மம்தாவுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நெற்றியில் காயம் ஏற்பட்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் மம்தா வெளியிட்டார். தற்போது அவர் குணமடைந்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். வாக்காளர்களுக்கு டீ போட்டு கொடுத்து, நடனம் ஆடி மம்தா ஓட்டு சேகரித்தார்.
இந்நிலையில், இன்று துர்காபூரில் ஹெலிகாப்டரில் ஏறிய பின் இருக்கையில் அமரும் போது மம்தா வழுக்கி கீழே விழுந்தார். மம்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் முதலுதவி அளித்தனர். இவர் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைவது வழக்கமானதாக ஆகிவிட்டது.
கடந்த 2021ம் ஆண்டும் சட்டசபை தேர்தலின் போது, அவரின் காலில் படுகாயம் ஏற்பட்டது. சில நாட்களாக அவர் வீல் சேரில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
உடல்நிலையை கவனமாக பார்த்து கொள்ளுமாறு மம்தாவுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பின்னர், அவர் தனது திட்டமிடப்பட்ட பயணத்தைத் தொடர்ந்தார். மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

