கர்நாடகாவில் நடப்பது தலிபான் ஆட்சி; எதிர்க்கட்சி தலைவர் அசோக் ஆவேசம்
கர்நாடகாவில் நடப்பது தலிபான் ஆட்சி; எதிர்க்கட்சி தலைவர் அசோக் ஆவேசம்
ADDED : ஜூன் 12, 2024 10:59 PM

மங்களூரு: ''பா.ஜ., தொண்டர்களை மர்ம நபர்கள் தாக்கியது கண்டனத்துக்குரியது. கர்நாடகாவில் தலிபான் ஆட்சி நடக்கிறது. முதல்வர் சித்தராமையா, திப்பு சுல்தான் போல் செயல்படுகிறார்,'' என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம் சாட்டினார்.
தட்சிண கன்னடாவில் பா.ஜ., வெற்றி பெற்றதை அடுத்து, கடந்த 4ம் தேதி, அக்கட்சி தொண்டர்கள், உல்லால் தாலுகா போலியார் என்ற பகுதியில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பாரத் மாதா கீ ஜே என்று கோஷம் எழுப்பிய பா.ஜ., தொண்டர் நந்தகுமார், ஹரீஷ் ஆகிய இருவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.
படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், நேற்று நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். மருத்துவர்களிடமும் தகவல் கேட்டறிந்தார்.
பின், அவர் கூறியதாவது:
பா.ஜ., தொண்டர்களை குறி வைத்து தாக்கி இருப்பது கண்டனத்துக்கு உரியது. தன் உடல் மீது திப்பு சுல்தான் வந்தது போல், முதல்வர் சித்தராமையா, தலிபான் ஆட்சி நடத்துகிறார்.
பாரத் மாதா கீ ஜே என்று கோஷம் எழுப்பியவர்களை, நாடு முழுதும் மாலை போட்டு மரியாதை செலுத்துவர். ஆனால், கர்நாடகாவில் மட்டும், அதுவும் மங்களூரு, உடுப்பி பகுதியில் கத்தியால் குத்துகின்றனர்.
இந்த தலிபான் ஆட்சியாளர்களை, கேள்வி கேட்பவர்கள் யாரும் இல்லை. சித்தராமையாவின் செயல்பாடும், திப்பு போல் தான் உள்ளது. முந்தைய சித்தராமையா ஆட்சியிலும், பெங்களூரு சிவாஜிநகரில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொல்லப்பட்டார்.
தேசிய குற்றப்பதிவு அறிக்கைப்படி, கடந்தாண்டில் கர்நாடகாவில் 40 சதவீதம் குற்ற சம்பவங்கள் அதிகமாகி உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது, குண்டர்களுக்கும், தலிபான்களுக்கும், பாகிஸ்தான் ஏஜென்ட்களுக்கும் திருவிழா போன்ற சூழ்நிலை ஏற்படுகிறது.
இரண்டு பா.ஜ., தொண்டர்களை, கத்தியால் குத்திய சம்பவத்துக்கு, காங்கிரஸ் தக்க விலை கொடுக்க நேரிடும். மாநில தலைவர் விஜயேந்திராவுடன் ஆலோசனை நடத்தி, சட்டசபையில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.