நீங்கள் என்ன பிரதமர் வேட்பாளரா? ராகுலுக்கு ஸ்மிருதி இரானி கேள்வி
நீங்கள் என்ன பிரதமர் வேட்பாளரா? ராகுலுக்கு ஸ்மிருதி இரானி கேள்வி
ADDED : மே 13, 2024 12:47 AM
புதுடில்லி : ''பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதம் நடத்த அழைப்பு விடுத்த நீங்கள் என்ன பிரதமர் வேட்பாளரா,'' என காங்., - எம்.பி., ராகுலிடம் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பிஉள்ளார்.
நாடு முழுதும் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது.
இந்த தேர்தலின் முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பொது தளத்தில் விவாதம் நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், அஜித் பி.ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் நேற்று முன்தினம் அறிவித்தார். 'மக்களுக்கு பெரிதும் உதவும் இந்த விவாதத்தில் பங்கேற்க தயாராக இருக்கிறேன். ஆனால், பிரதமர் மோடி இதற்கு ஒப்பு கொள்ள மாட்டார் என உறுதியாக சொல்கிறேன்' என, அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ராகுலின் கருத்துக்கு மத்திய அமைச்சரும், உ.பி., அமேதி தொகுதி பா.ஜ., வேட்பாளருமான ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''காங்கிரசின் கோட்டை என கூறப்படும் அமேதி தொகுதியில், பா.ஜ.,வின் சாதாரண தொண்டரை எதிர்த்து போட்டியிட தைரியம் இல்லாதவர் ராகுல்.
'அவர் இப்படி பேசுவதை தவிர்க்க வேண்டும். பிரதமர் மோடியுடன் சமமாக அமர்ந்து விவாதம் செய்ய விரும்பும் இவர் யார்? இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா,'' என்றார்.
காங்கிரஸ் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான அமேதியில், 2004 முதல் வெற்றி பெற்று வந்த ராகுல், 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், ஸ்மிருதி இரானியிடம் தோல்வியை தழுவினார்.
இந்த முறை கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டதுடன், சோனியாவின் ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார்.