முதல்வராகும்படி அர்ச்சகர் வாழ்த்தியதில் என்ன தவறு? துணை முதல்வர் சிவகுமார் கேள்வி
முதல்வராகும்படி அர்ச்சகர் வாழ்த்தியதில் என்ன தவறு? துணை முதல்வர் சிவகுமார் கேள்வி
ADDED : மார் 28, 2024 03:54 AM

பெங்களூரு :L லோக்சபா தேர்தலை தீவிரமாக கருதும் துணை முதல்வர் சிவகுமார், கோவில், கோவிலாக தரிசனம் செய்கிறார். நேற்று பிரசித்தி பெற்ற கோகர்ணாவுக்கு வருகை தந்தார்.
மத்தியில் ஆட்சி நடத்த புதிய அரசை தேர்வு செய்யும் லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. ஓட்டுப் பதிவுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் கோவில்கள், மடங்களை சுற்றி வருகின்றனர்.
துணை முதல்வர் சிவகுமாரும் கோவில்களை தரிசனம் செய்கிறார். நேற்று முன்தினம் தர்மஸ்தலாவின் மஞ்சுநாத சுவாமி, குக்கே சுப்ரமண்யர் கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.
வரலாற்று பிரசித்தி பெற்ற, உத்தரகன்னடாவின், கோகர்ணா திருத்தலத்துக்கு சென்றார். ஆத்மலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்தார். அப்போது அர்ச்சகர், முதல்வராகட்டும் என, சிவகுமாரை வாழ்த்தினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
நான் முதல்வராக வேண்டும் என, கடவுளின் முன்னால் அர்ச்சகர் வாழ்த்தியதில் என்ன தவறு? தற்போது சித்தராமையா முதல்வராக இருக்கிறார். அவரது தலைமையில் நாங்கள் முன்னோக்கி நடக்கிறோம்.
சிலர் என்னை முதல்வராக வேண்டும் என, விரும்புகின்றனர். இந்த ஆசை, அவர்கள் வாயில் இருந்து வருவதை, யாராவது தடுக்க முடியுமா? யார் என்ன ஆசைப்பட்டாலும், இறுதியில் முடிவு செய்வது கட்சி மேலிடம்தான்.
முதல்வர் சித்தராமையா தலைமையில், மாநிலத்தில் நல்லாட்சி நடக்கட்டும். நல்ல மழை பெய்து, விளைச்சல் அதிகரிக்க வேண்டும் என, பிரார்த்தனை செய்தேன்.
கோகர்ணாவின், மஹாபலேஸ்வரர் கோவிலுக்கு வந்தேன். கடவுளை தரிசித்தேன். சிறப்பு பூஜைகள் செய்தேன். முக்தி அளிக்கும் கோவில்களில், இதுவும் ஒன்றாகும். சிவனின் ஆத்மலிங்கம் இங்கு சிறப்புக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.