ADDED : செப் 14, 2024 11:38 PM

கை, கால் நன்றாக இருக்கும் நபர்களே, வேலை செய்ய சோம்பேறித்தனம் செய்து பிச்சை எடுப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு கையை இழந்தாலும், ஒரு வாலிபர் தண்ணீர் கேன் சுமந்து குடும்பத்தை காப்பாற்றி, மற்றவருக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.
ஹொளேநரசிபுராவின் காமசமுத்ரா கிராமத்தில் வசிப்பவர் சுனில், 38. இவரது குடும்பத்தில், தாய், தந்தை உட்பட, ஐந்து பேர் உள்ளனர். இவர்களை சுனில் காப்பாற்றி வருகிறார்.
இவர் கர்நாடக மின்வாரியத்தில் பணியாற்றினார். 2009ல் பணியில் இருந்தபோது, மின்சாரம் பாய்ந்ததில், தன் வலது கையை இழந்தார். இதனால் 2010ல் இவரை பணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கடமை இருந்ததால், பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் சுனிலுக்கு இருந்தது. ஆட்டோ ஓட்ட பயிற்சி எடுத்திருந்தார். அது அவருக்கு கைகொடுத்து உதவியது.
வாடகைக்கு ஆட்டோ எடுத்து, வீடுகள், கடைகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்கிறார். அனைத்து பணிகளையும் ஒரே கையால் செய்கிறார். ஒரு கையால் ஆட்டோ ஓட்டுகிறார், தண்ணீர் கேன் கொண்டு செல்கிறார்.
தன் இயலாமையை காண்பித்து, உறவினர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் என, யாரிடமும் உதவி கேட்காமல் தன்மானத்துடன் உழைத்து, குடும்பத்தை காப்பாற்றுகிறார். இவரை பலரும் பாராட்டுகின்றனர்.
இவரது வாழ்க்கை, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக உள்ளது.
- நமது நிருபர் -