நான் முதல்வரானால் தவறென்ன? முதல்வரின் ஆலோசகரும் ஆசை!
நான் முதல்வரானால் தவறென்ன? முதல்வரின் ஆலோசகரும் ஆசை!
ADDED : செப் 10, 2024 06:53 AM

கொப்பால்: ''நான் முதல்வரானால் தவறு என்ன? எனக்கும் அதிர்ஷ்டம் அடிக்கலாம்,'' என, முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ ராயரெட்டி தெரிவித்தார்.
கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கல்யாண கர்நாடகா பகுதியில், பி.ஆர்.பாட்டீலை தவிர, அதிக முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த எம்.எல்.ஏ., நான்தான். இப்பகுதிக்கும், லிங்காயத் சமுதாயத்தினருக்கும் முதல்வர் பதவி வழங்குவதானால், நானே முன்னிலையில் இருப்பேன்.
ஜனநாயகத்தில் யார், என்ன ஆவர் என்பது யாருக்கும் தெரியாது. எனக்கும் அதிர்ஷ்டம் அடிக்கலாம். நான் முதல்வரானால் தவறு என்ன? தேஷ்பாண்டே, சதீஷ் ஜார்கிஹோளி, எம்.பி.பாட்டீல் முதல்வர் பதவியை எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. ஜனநாயக நடைமுறையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, பிரதமராகும் விருப்பம் இருக்கலாம். மாநிலத்தில் முதல்வர் மாற்றம் வேண்டும் என, சிலர் விரும்புகின்றனர். முதல்வராக சித்தராமையா நீடிக்க வேண்டும் என்பது, என் விருப்பம்.
முதல்வர் பதவி தற்போதைக்கு காலியில்லை. ஆனால் அவரை மாற்ற முடிவு செய்தால், மூத்தவனான எனக்கு முதல்வர் பதவி அளிக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

