ADDED : ஆக 25, 2024 08:34 AM

மைசூரு தசரா விழா, அக்டோபர் 3ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை பத்து நாட்கள் நடக்கிறது. ஜம்பு சவாரி ஊர்வலத்திற்காக அம்பாரி சுமக்கும் அபிமன்யு உட்பட 14 யானைகள் தேர்வு செய்யப்பட்டன. அபிமன்யு உட்பட ஒன்பது யானைகள் கடந்த 21ம் தேதி காட்டில் இருந்து மைசூருக்கு அழைத்து வரப்பட்டன.
நேற்று முன்தினம் மைசூரு அரண்மனையில் யானைகளுக்கு சிறப்பான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நடைபயிற்சி துவக்கம்
நேற்று முதல் யானைகளுக்கு நடைபயிற்சி துவங்கப்பட்டுள்ளது. மைசூரு அரண்மனை வளாகத்தில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் உள்ள பன்னி மண்டபம் வரை யானைகள் அழைத்துச் செல்லப்படுகின்றன.
ஜம்பு சவாரி முடியும் வரை, தினமும் யானைகள், நகரின் முக்கிய சாலைகளில் நடைபயிற்சி மேற்கொள்ளும். யானைகளின் முன், ஒரு ஜீப் செல்லும். இந்த ஜீப்பின் பின்புறத்தில், சாலையின் அகலத்திற்கு 'காந்தம் உள்ள கருவி' பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த கருவி, தார் சாலையில் உள்ள இரும்பு துண்டுகள், ஆணி, நட்டு - போல்டு, கம்பி, குச்சி போன்றவற்றை அகற்றிவிடும். இதன் பின்னால் செல்லும் மற்றொரு வாகனம், சாலையில் உடைந்து கிடக்கும் கண்ணாடி, கிளாஸ் துண்டுகள், கற்களை அப்புறப்படுத்திச் செல்லும்.
இப்பொருட்கள் யானைகளின் கால்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இதை தடுக்கவே, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நேற்றைய நடைபயிற்சியின்போது, சாலையின் இருபுறமும் கூடி நின்ற மக்கள், மொபைல் போன்களில் யானைகளை உற்சாகமாக புகைப்படம் எடுக்கின்றனர்.
எடை மதிப்பீடு
நடைபயிற்சி முடிந்து திரும்பிய, ஒன்பது தசரா யானைகளுக்கும் சாயாஜி ராவ் சாலையில் உள்ள 'லோடு' லாரிகள் எடை மதிப்பீடு செய்யும் இடத்தில், எடை, உயரம் மதிப்பிடப்பட்டது. அனைத்து யானைகளும் நல்ல உடல்வாகுடன் இருப்பதாக, மாவட்ட வன அதிகாரி பிரபு கவுடா கூறியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி முடிந்த பின் இரண்டாம் கட்டமாக ஐந்து யானைகள் வருகின்றன. அவற்றுக்கும் இதுபோன்று எடை, உயரம் பரிசோதிக்கப்படும்.
தசரா முடியும் வரை அனைத்து யானைகளுக்கும் தரமான உணவு கொடுக்கப்படும். உடற்பரிசோதனை நடத்தி, பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படும். தசரா நிறைவு பெற்ற பின், மீண்டும் அனைத்து யானைகளுக்கும் எடை பரிசோதிக்கப்படும்.
'ஸ்பெஷல்' உணவு
மைசூரு வனத்துறை அதிகாரி மாலதி பிரியா கூறியதாவது:
வனப்பகுதியில் இருந்த யானைகள், நகருக்கு வந்து மூன்று நாட்கள் ஆகின்றன. முதலில் வனப்பகுதியில் இருந்த சுற்றுச்சூழலில் இருந்து நகர்ப்புற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் யானைகள் பழக வேண்டும். இதற்கு ஒரு வாரம் அவகாசம் தேவைப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் வனப்பகுதியில் தின்ற உணவுகளான இலைகள், புற்கள், உலர்ந்த நெல், தேவைப்பட்டால் கரும்பு போன்றவை வழங்கப்படும். நகருக்கு வந்த உடன், யானைகளுக்கு 'ஸ்பெஷல்' உணவு வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால் வயிற்றுப்போக்கு, பேதி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
ஒரு வாரம் நகரின் வெப்பநிலைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பழகி, படிப்படியாக 'ஸ்பெஷல்' உணவு வழங்கப்படும். இச்சூழ்நிலைக்கு யானைகள் பழகிய பின், தினமும் காலை மற்றும் மாலையில் வித விதமான உணவுகள் வழங்கப்படும். என்ன உணவு வழங்க வேண்டும் என்ற பட்டியல் தயாராகி வருகிறது.
யானைகளுக்கு அரண்மனை வளாகத்தில் உணவு தயாரிக்கும் அறை உருவாக்கப்படுகிறது. மருத்துவ பரிசோதனை செய்து, உடல் நலம் பரிசீலித்து, அவற்றின் உடலுக்கு தகுந்த மாதிரி, உணவுகள் வழங்கப்படும்.
பெண் யானைகளுக்கும், ஆண் யானைகளுக்கும் எத்தனை கிலோ உணவு வழங்க வேண்டும் என்ற கணக்கு உள்ளது. இதன்படி தான் வழங்கப்படும். சில யானைகளுக்கு வெண்ணெய் பிடிக்காது; சில யானைகளுக்கு பிடிக்கும்; இது போன்ற ஆய்வு செய்து வழங்கப்படும்.
உணவுடன் தினமும் உலர்ந்த புற்கள், அச்சு வெல்லம், கொப்பரை தேங்காய், உப்பு போன்றவற்றை சேர்த்து 'உருண்டை கட்டி'யாக தயார் செய்து வழங்கப்படும்.
பொதுமக்கள், யானைகளை நேசிப்போர், விலங்கு ஆர்வலர்கள் நேரடியாக யானைகளுக்கு கொடுப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். இதற்காக யானைகளுடன் இருக்கும் வனத்துறை மற்றும் விலங்குகள் காப்பக அதிகாரியின் அனுமதி பெற வேண்டும். பழம் போன்றவற்றை கால்நடை மருத்துவர்கள் பரிசீலித்த பின்னரே, யானைகளக்கு வழங்க அனுமதிக்கப்படும்.
தினமும் காலை, மாலையில் நடைபயிற்சிக்கு சென்று வந்ததும், நான்கு முதல் பத்து குடம் வரை தண்ணீர் குடிப்பதற்கு வைக்கப்படுகிறது. தினமும் தண்ணீரில் குளிக்க வைக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -