ADDED : மே 26, 2024 06:51 AM

பெங்களூரு: ''யார் ஆட்சி நடந்தாலும், மழைக்காலங்களில் சாலைகளில் பள்ளங்கள், வெள்ளம் ஏற்படுவது சகஜம்,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் சில நாட்களாக பெய்த மழையால், 6,000க்கும் அதிகமான சாலை பள்ளங்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
பள்ளங்களை, மூடாமல் அலட்சியமாக செயல்படும், காங்கிரஸ் அரசுக்கு, எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது 'பிராண்ட் பெங்களூரு' அல்ல; பள்ளங்கள் பெங்களூரு என்று பா.ஜ., கிண்டல் செய்துள்ளது.
இதற்கு பதிலளித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
பெங்களூரு நகரை, பிராண்ட் பெங்களூருவாக மாற்ற வேண்டும் என்பது துணை முதல்வர் சிவகுமாரின் கனவு.
இதை, நம் தலைவர்களே ஏளனம் செய்ய கூடாது. பள்ளங்கள் பெங்களூரு என்று கிண்டல் அடிப்பது சரியில்லை.
இத்தகைய பேச்சு மூலம், மாநிலத்துக்கும், நாட்டு மக்களுக்கும் என்ன தகவல் சொல்கிறீர்கள்? பா.ஜ.,வினர் பொறுப்புடன் பேச வேண்டும். யார் ஆட்சி நடந்தாலும், மழைக் காலங்களில் சாலைகளில் பள்ளங்கள், வெள்ளம் ஏற்படுவது சாதாரணம்.
பா.ஜ., ஆட்சியிலும் மழை வெள்ளம் ஏற்பட்டது. சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டன. பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்.
அதை சரிப்படுத்துவோம். அரசும் பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.