இரட்டை அடுக்கு மேம்பாலம் திறக்கப்படுவது எப்போது? வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
இரட்டை அடுக்கு மேம்பாலம் திறக்கப்படுவது எப்போது? வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
ADDED : ஜூன் 21, 2024 05:41 AM
பெங்களூரு: பெங்களூரு சென்ட்ரல் சில்க் போர்டு- - ராகிகுட்டா இடையில் அமைக்கப்பட்டுள்ள இரட்டை அடுக்கு மேம்பாலம் எப்போது திறக்கப்படும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரூ.330 கோடி
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பொம்மனஹள்ளி -- ஆர்.வி., ரோடு இடையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில், இந்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில்கள் இயங்கும் வாய்ப்புள்ளது.
ராகிகுட்டாவில் இருந்து சென்ட்ரல் சில்க் போர்டு வரை 3.13 கி.மீ., துாரம் 330 கோடி ரூபாய் செலவில், இரட்டை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்து வருகிறது.
இரட்டை பாலத்தில் கீழே மெட்ரோ ரயிலும், மேல் பாலத்தில் வாகனங்களும் செல்லும். இந்த பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், ராகிகுட்டா- - சென்ட்ரல் சில்க் போர்டு இடையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
'ஏ' 'பி' 'சி' 'டி' 'இ' என ஐந்து பிரிவுகளாக, பாலம் கட்டும் பணிகள் நடந்தன. 'ஏ' 'பி' 'சி' பிரிவு சாலைகள், ராகிகுட்டாவில் இருந்து வரும் வாகனங்கள் கே.ஆர்.புரம், ஓசூர் சாலையை இணைக்கும் வகையில் உள்ளது.
'டி' 'இ' பிரிவு சாலைகளில், கே.ஆர்.புரம், பி.டி.எம்., லே -- அவுட்டில் இருந்து வரும் வாகனங்கள், ராகிகுட்டாவுக்கு செல்ல முடியும்.
தற்போது, 'ஏ' 'பி' 'சி' சாலை பணிகள் முடிந்துஉள்ளன. இதனால் இரட்டை அடுக்கு மேம்பாலத்தில், வாகன போக்கு வரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அனுமதி எப்போது?
ஜூன் 15ம் தேதி முதல் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியானது.
ஆனால் இறுதி கட்டப் பணிகள் நடப்பதால், ஜூன் 15 அன்று பாலம் திறக்கப்படவில்லை. இந்த பாலம் எப்போது திறக்கப்படும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்த மாத இறுதிக்குள், மேம்பாலத்தில் வாகன போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

