முதல்வருக்கு வாங்கிய சமோசா எங்கே? ஹிமாச்சல் சி.ஐ.டி., போலீசார் விசாரணை!
முதல்வருக்கு வாங்கிய சமோசா எங்கே? ஹிமாச்சல் சி.ஐ.டி., போலீசார் விசாரணை!
ADDED : நவ 09, 2024 01:00 AM

சிம்லா:ஹிமாச்சல பிரதேச சி.ஐ.டி., தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுக்காக வாங்கப்பட்ட சமோசா காணாமல் போனதால், சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததுடன், கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.
ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இம்மாநில, சி.ஐ.டி., தலைமையகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை கடந்த மாதம் 21ல் முதல்வர் சுகு திறந்து வைத்தார்.
அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு வழங்குவதற்காக, சமோசா மற்றும் கேக்குகள் வாங்கப்பட்டன.
நிகழ்ச்சியின்போது அவை காணாமல் போனதாகவும், முதல்வரின் பாதுகாப்புக்காக இருந்தவர்கள் அவற்றை சாப்பிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வருக்காக வாங்கப்பட்ட சமோசா எப்படி காணாமல் போனது என்பதை கண்டுபிடிக்க சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதை எதிர்க்கட்சியான பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது.
'நாட்டில் ஊழல் உட்பட கண்டுபிடிக்க வேண்டிய ஏராளமான பிரச்னைகள் இருக்கும்போது, சமோசாவை தேடி, காங்., அரசு விசாரணை மேற்கொள்கிறது. இதில் இருந்தே அவர்கள் ஆட்சி செய்யும் லட்சணத்தை மக்கள் புரிந்து கொள்ளலாம்' என, மாநில பா.ஜ., தலைவர் சத்பால் சத்தி தெரிவித்தார்.
இதற்கு விளக்கம் அளித்த சி.ஐ.டி., இயக்குனர் சஞ்சீவ் ரஞ்சன் ஓஜா, ''இது துறையின் உள் விவகாரம். விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை. தேவையின்றி இது பெரிதாக்கப்பட்டுஉள்ளது.
''நிகழ்ச்சி முடிந்ததும், அதிகாரிகள் பேசிக் கொண்டிருக்கையில் முதல்வருக்காக வாங்கப்பட்ட சமோசா எங்கே போனது என பார்க்கும்படி பேச்சுக்கு இடையே கூறப்பட்டது. அது இப்படி ஊதி பெரிதாக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரம் குறித்து கேலி பேசி வருவதால், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்தார்.
''சமோசாவை தேடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் பெரிதுபடுத்தி விட்டன. விசாரணை சமோசாவுக்காக அல்ல. அதிகாரிகள் செய்த தவறு குறித்துதான் விசாரிக்கப்பட்டது,'' என்றார்.