கோடை விடுமுறையில் குடும்பத்துடன் ஹாயாக காலம் கழிக்க எங்கு செல்லலாம்?
கோடை விடுமுறையில் குடும்பத்துடன் ஹாயாக காலம் கழிக்க எங்கு செல்லலாம்?
ADDED : மே 09, 2024 06:35 AM

கர்நாடகாவில் தற்போது பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறை. 'எங்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லுங்கள்' என, பெற்றோரை அவர்கள் வற்புறுத்துகின்றனர். வெயில் வாட்டி வதைப்பதால், பிள்ளைகளை அழைத்துச் சென்று அவதிப்பட வேண்டுமா என்று பெற்றோரும் யோசிக்கின்றனர்.
அத்தகையோருக்கு குளிர்ச்சியான பிரதேசங்களுக்கு செல்ல, சில அற்புதமான சுற்றுலா தலங்களை பார்ப்போம். ஏற்கனவே பார்த்துவிட்டோம், மறுபடியும் செல்ல வேண்டுமா என்று சிலர் யோசிக்கலாம். ஆனால், நகர வாழ்க்கையில் இருந்து சற்று விடுபட்டு, குடும்பத்தினருடன் ஹாயாக காலம் கழிக்க, மீண்டும் செல்வதில் தவறில்லை.
அந்த வகையில், பெங்களூருக்கு அருகே மைசூரை கடந்து குடகு செல்லலாம். காவிரி பிறப்பிடமான தலைக்காவிரியை காணலாம். காவிரி தாயை தரிசித்து, குளிர்ச்சியான பசுமையை கண்டு நம்மை அறியாமலே கண்களுக்கு விருந்தளிக்கும். அங்கிருந்து கீழே வந்தால், பாகமண்டலாவில் பகண்டேஸ்வரா கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம்.
அப்படியே குழந்தைகள் முதல், முதியோர் வரை ரசிக்கும் துபாரே யானைகள் முகாமிற்கு சென்று, ஒரே இடத்தில் ஏராளமான யானைகளை பார்க்கலாம். யானையை தொட்டு, குளிப்பாட்டலாம். காவிரி ஆற்றை படகில் சென்று ரசிக்கலாம்.
மற்றொரு மலைப் பிரதேசமான சிக்கமகளூரில் தற்போது நல்ல மழை பெய்து வருவதால், அங்குள்ள முல்லையனகிரி மலை மீது ஏரி பசுமையை கண்டு கழிக்கலாம். கண்ணுக்கு எட்டிய வரை மேற்கு தொடர்ச்சி மலைகளின் ரம்மியமான காட்சி, அந்த இடத்தை விட்டு கிளம்பவே விடாது.
ஹனுமன குந்தி அருவியில் குளித்து மகிழலாம். சிக்கமகளூரின் சிருங்கேரியில் சாரதாம்பா கோவிலுக்கு சென்று, தேவியை தரிசிக்கலாம்.
வனப்பகுதிக்கு நடுவில் வாகனங்களில் செல்வதே தனி அனுபவத்தை தரும். ஹொரனாடு அன்னபூர்ணேஸ்வரி கோவிலும் சிறந்த அனுபவத்தை தரும்.
இதுபோன்று, ஹாசன் மாவட்டம், சக்லேஸ்பூருக்கு சென்றால், மனதை கொள்ளை கொள்ளும் வகையில் பழங்கால மஞ்சராபாத் கோட்டையை பார்ப்பவர்கள் வாழ்க்கையில் மறக்க மாட்டார்கள். சக்லேஸ்பூரை பொறுத்தவரையில், காலை, மாலை இரு வேளையிலும் பனிப்பொழிவுடன் குளிர்ச்சியான அனுபவத்தை தரும். இத்துடன் மேலும் பல இடங்களை குடும்பத்தினருடன் பார்த்து ரசிக்கலாம்.
கர்நாடக சுற்றுலா துறை சார்பில், முக்கியமான சுற்றுலா தலங்களில் ஹோட்டல்கள் உள்ளன. தனியார் சொகுசு விடுதிகள், ஹோம் ஸ்டேக்களும் உள்ளன. வசதிக்கு ஏற்ப முன்பதிவு செய்து கொண்டு செல்லலாம்
- நமது நிருபர் -.