அம்பேத்கர் பவன் நிலம் எங்கே? 11ல் பா.ஜ., - ம.ஜ.த., போராட்டம்!
அம்பேத்கர் பவன் நிலம் எங்கே? 11ல் பா.ஜ., - ம.ஜ.த., போராட்டம்!
ADDED : செப் 01, 2024 11:54 PM

தங்கவயல்,: அம்பேத்கர் பவன் கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியதை திரும்ப பெற்றதால், தங்கவயல் பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வினர் இணைந்து வரும் 11ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர்.
கர்நாடகாவில் அம்பேத்கர் வந்து சென்ற இடங்களில் 10 ஏக்கரில் நினைவு மண்டபம், ஆய்வரங்கம் இணைந்த அம்பேத்கர் பவன் அமைக்குமாறு, தலித் அமைப்பினர், அப்போது முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மையிடம் கோரினர்.
இதை ஏற்று, 2022 டிசம்பரில் 2 கோடி ரூபாய் நிதியும், 5 ஏக்கர் நிலமும் வழங்குவதாக கர்நாடக அரசு அறிவித்தது.
தங்கவயலில் உள்ள சாம்பியன் ரீப் தென்னிந்திய பவுத்த சங்கத்திற்கு, 1954 ஜூலை 12ல் அம்பேத்கர் வந்திருந்தார்.
இதை நினைவு கூரும் வகையில், தங்கவயலில் நினைவு மண்டபம், ஆய்வரங்கம் அமைக்கவும், பெமல் தொழிற்சாலை அருகில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. கர்நாடக சமூக நலத்துறை பெயர் பலகையும் வைத்தது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின், பெமல் தொழிற்சாலையில் பயன்படுத்தாமல் இருந்த 973 ஏக்கர் நிலத்தை, 2023ல் மாநில அரசு பெற்றது. அம்பேத்கர் மண்டபம் அமைப்பதாக இருந்த 5 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து, கர்நாடக தொழிற்சாலை மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்படைத்தது.
அம்பேத்கர் மண்டபம் அமைப்பதற்கு மாற்று இடம் ஒதுக்கப்படவில்லை. பா.ஜ., அரசு ஒதுக்கிய 2 கோடி ரூபாய் நிதி எங்கே என்ற கேள்வி எழுந்து உள்ளது.
இந்த நிதியும், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் நிதி முறைகேடு போல மாறியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதை கண்டித்து தங்கவயல் பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வினர் போராட்டம் வரும் 11ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர்.
அம்பேத்கர் பவன் கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கிய இடத்தில் சமூக நலத்துறை வைத்த பெயர் பலகை - கோப்பு படம்.