பூஜை செய்த செங்கல் எங்கே? ஆயனுார் மஞ்சுநாத் கேள்வி!
பூஜை செய்த செங்கல் எங்கே? ஆயனுார் மஞ்சுநாத் கேள்வி!
ADDED : ஏப் 17, 2024 05:23 AM

ஷிவமொகா, : ''அயோத்தி ராமர் கோவில் கட்டடம், கற்களால் கட்டப்பட்டுள்ளது. இங்கு நாட்டின் ராமபக்தர்கள் பூஜை செய்த செங்கல்களை பயன்படுத்தவில்லை,'' என மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆயனுார் மஞ்சுநாத் குற்றம்சாட்டினார்.
ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ராமர் கோவில் கட்ட 3,800 கோடி ரூபாய் நன்கொடையுடன், ஒவ்வொரு கிராமங்களிலும் செங்கல் சேகரிக்கப்பட்டது.
மக்கள் செங்கல்களை பூஜை செய்து, அயோத்திக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கட்டடம் கட்ட, இந்த செங்கல் பயன்படுத்தவில்லை. இதனால் பக்தர்களின் ஆன்மிக உணர்வுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நோக்கில் அரை, குறையாக இருந்த ராமர் கோவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ராமபக்தர்கள் அனுப்பிய செங்கல் என்ன ஆனது. இதற்கு எம்.பி., ராகவேந்திரா பதிலளிக்க வேண்டும்.
ராமர் கோவில் மக்களால் கட்டப்பட்டது. ராமன் பெயரில் பா.ஜ.,வினர் ஓட்டு கேட்கின்றனர். லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் ஆட்டத்துக்கு, பதிலடி கொடுக்க வேண்டும்.
காங்கிரஸ் வேட்பாளர் கீதா சிவராஜ்குமார் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

