பயிற்சி டாக்டர் படுகொலை வழக்கின் ஆவணம் எங்கே?: சுப்ரீம் கோர்ட்
பயிற்சி டாக்டர் படுகொலை வழக்கின் ஆவணம் எங்கே?: சுப்ரீம் கோர்ட்
UPDATED : செப் 10, 2024 06:45 AM
ADDED : செப் 10, 2024 01:20 AM

புதுடில்லி : கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதற்கான, 'சல்லான்' எனப்படும் முக்கிய ஆவணம் எங்கே என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த ஆவணம் காணாமல் போயிருந்தால், அது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ள நீதிபதிகள், போராட்டத்தை கைவிட்டு, டாக்டர்கள் பணிக்கு திரும்பவும் வலியுறுத்தியுள்ளனர்.
மேற்கு வங்கம் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்டார். கடந்த மாதம் 9ம் தேதி நடந்த இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணை தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் கோல்கட்டா போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
நடவடிக்கையில்லை
விசாரணை நடந்து வருவதால் வழக்கின் விசாரணையை, 17ம் தேதிக்கு அமர்வு ஒத்தி வைத்தது. புதிய அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சி.பி.ஐ.,க்கு அமர்வு உத்தரவிட்டது.
மாணவர்கள், டாக்டர்கள் ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், போதிய சிகிச்சை வசதி கிடைக்காமல் 23 பேர் உயிரிழந்ததாக, மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினால், அவர்கள் மீது, பணியிடமாற்றம் உட்பட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், மாநில அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு, இன்று மாலை 5:00 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என அமர்வு குறிப்பிட்டது.
14 மணி நேரம்
முன்னதாக வழக்கின் விசாரணையின்போது அமர்வு கூறியதாவது:
பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் பல ஆதாரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. உடல் கண்டெடுக்கப்பட்டு, 14 மணி நேரம் கழித்தே, எப்.ஐ.ஆர்., தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அதற்கு முன்னதாக, தடயவியல் துறையின் ஆய்வு நடத்தப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் சேகரிக்கப்பட்டு, எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
பிரேத பரிசோதனையின்போது, சல்லான் எனப்படும் ஆவணத்தை கொடுக்க வேண்டும். அந்த ஆவணத்தில், உடலில் என்னென்ன பொருட்கள் இருந்தன என்பது உள்ளிட்ட தகவல்கள் இருக்கும்.
ஆனால், இந்த ஆவணம் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த ஆவணத்தை சேகரித்து அளிப்பதாக, மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இந்த ஆவணம் உள்ளதா அல்லது காணாமல் போய்விட்டதா. அவ்வாறு காணாமல் போயிருந்தால், அது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அமர்வு கூறியது.
இதற்கிடையே, கோல்கட்டா போலீஸ் கமிஷனர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும், துர்கா பூஜை பண்டிகை வரவிருப்பதால், பாதுகாப்பு காரணங்களை கருதி, இந்த விவகாரத்தில் முடிவெடுக்கவில்லை என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
குழப்பம் ஏற்படுத்த முயற்சி!
பயிற்சி பெண் டாக்டர் கொலை தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தப்படுவதில், மத்திய அரசுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தொடர்பு உள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட குழப்பம் போல், இங்கும் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால், வங்கதேசம் வேறு, இந்தியா வேறு என்பதை அவர்கள் மறந்து விட்டனர்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,