சொகுசு விடுதியில் இருந்தால் ஆட்சியை கவனிப்பது யார்? முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி
சொகுசு விடுதியில் இருந்தால் ஆட்சியை கவனிப்பது யார்? முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி
ADDED : மே 09, 2024 10:28 PM

பெங்களூரு, - ''கர்நாடகாவில் மக்களுக்கு குடிநீர் இல்லை, கால்நடைகளுக்கு தீவனம் இல்லை. ஆனால் முதல்வர் சித்தராமையா, சொகுசு விடுதியில் ஜூஸ் குடித்து பொழுது போக்குகிறார்,'' என எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம் சாட்டினார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் சித்தராமையா பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. கேள்வி எழுப்பும் முன், மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரட்டும். முதல்வர் அலட்சியமாக இருந்தால், அவரை வெற்றி பெற வைத்த மக்களின் கதி என்ன?
முதல்வர் மினரல் வாட்டர் அல்லது வேறு எது வேண்டுமானாலும் குடிக்கட்டும். மக்களுக்கு சுத்தமான குடிநீர் வினியோகிக்க வேண்டும். பால் ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.
மக்கள் பரிதவிப்பு
குடிநீர் கிடைக்காமல் மக்கள் பரிதவிக்கின்றனர்; கால்நடைகளுக்கு தீவனம் இல்லை. ஆனால் முதல்வர் சித்தராமையா, சொகுசு விடுதியில் 'ஏசி' அறையில் அமர்ந்து, நல்ல காற்று வாங்கி கொண்டு, ஜூஸ் குடித்தபடி உல்லாசமாக பொழுது போக்குகிறார். சொகுசு விடுதியில் ஜாலியாக அமர்ந்திருந்தால், ஆட்சி இயந்திரத்தை நடத்தி செல்வது யார்.
முதல்வர் சொகுசு விடுதிக்கு சென்றுள்ளார். 20 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ததால், ஓய்வெடுக்க சென்றுள்ளார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, 10 ஆண்டுகளில் ஒரு நாளும் விடுமுறை எடுக்கவில்லை.
அவரது தாயார் காலமான போதும், பிரதமர் தன் கடமையில் இருந்து விலகவில்லை. பிரதமர் மோடியுடன், சித்தராமையாவை ஒப்பிட முடியாது.
மாநிலத்தில் ஹிந்துக்கள் அடிக்கடி கொலை செய்யப்படுகின்றனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஊதியம் கிடைக்காமல், போராட்டத்தில் குதித்துள்ளனர்.
குறைந்தபட்சம் இவர்களின் கோரிக்கைகள், என்ன என்பதை தெரிந்து கொள்ள சம்பந்தப்பட்ட அமைச்சர் முயற்சிக்கவில்லை. அனைவரும் சுகமாக பொழுது போக்குகின்றனர். விதான் சவுதாவுக்கு பூட்டு போடுங்கள்.
பில் பாக்கி தொகை
தென்னை விவசாயிகளுக்கு, இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. சரியான உணவு வழங்காததால், 2 லட்சம் சிறார்கள், அங்கன்வாடிகளில் சேரவில்லை. பில் பாக்கி தொகை வழங்காததால், பெங்களூரில் ஒப்பந்ததாரர்கள் பணிகளை நிறுத்தி உள்ளனர்.
காங்., தலைவர் ராகுலின் ஆலோசகர் சாம் பிட்ரோடா, நிற பாகுபாடு கொள்கையை பின்பற்றுகிறார். இவர் மீது கட்சி மேலிடம், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர்கள் நாட்டுக்குள்ளேயே இருந்து, தேச துரோக செயல்களை செய்கின்றனர். காந்தியின் உடல் நிறத்தை காரணம் காண்பித்து, ரயிலில் இருந்து இறக்கிய உதாரணம் நம் கண் முன்னேயே உள்ளது.
அம்பேத்கரும் கூட ஜாதி நிந்தனையை அனுபவித்துள்ளார். இதே வேலையை காங்கிரஸ், சாம் பிட்ரோடா மூலம் செய்கிறது.
கர்நாடகாவில் உள்ள ஒக்கலிகர், லிங்காயத், தலித்துகளுக்கு காங்கிரஸ் எந்த சாயத்தை பூசுகிறது. சோனியா இத்தாலியில் இருந்து வந்தவர், இவரை இந்தியர் என, ஒப்புக்கொள்ளும்படி பலவந்தப்படுத்தினர். ராபர்ட் வாத்ரா யார். எந்த நாட்டிலிருந்து வந்தவர்.
இவ்வாறு அவர் கூறினார்.